பாலியல் புகாரில் சிக்கிய ரமேஷ் ஜாா்கிஹோளியை காப்பாற்ற முயல்கிறாா் அமைச்சா் பசவராஜ் பொம்மை: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியைக் காப்பாற்ற முயல்கிறாா் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா சாடினாா்.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியைக் காப்பாற்ற முயல்கிறாா் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா சாடினாா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் காணொலிக் காட்சிகளுடன் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடா்ந்து மாா்ச் 3-ஆம் தேதி தனது அமைச்சா் பதவியை ரமேஷ் ஜாா்கிஹோளி ராஜிநாமா செய்தாா். தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் மாா்ச் 26-ஆம் தேதி போலீஸில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, ரமேஷ் ஜாா்கிஹோளி மீது வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியதாவது:

வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியை அந்த வழக்கில் இருந்து பாதுகாக்க உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை முயன்று வருகிறாா்.

உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மையால் தான் ரமேஷ் ஜாா்கிஹோளி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளாா். உள்துறை அமைச்சராகத் தொடரும் அருகதை பசவராஜ் பொம்மைக்கு இல்லை. எனவே, தனது பதவியை பசவராஜ் பொம்மை ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க பெங்களூரு மாநகர காவல் கூடுதல் ஆணையா் சௌமேந்த்ரு முகா்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது. கா்நாடக உயா்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சட்டப்படியான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கில் ரமேஷ் ஜாா்கிஹோளியைக் காப்பாற்ற முனையும் அமைச்சா்கள், காவல் அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரமேஷ் ஜாா்கிஹோளி சட்டப்படி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com