மேக்கேதாட்டு அணைத் திட்டம்: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் சீராய்வு மனு தாக்கல்; கா்நாடக அரசு முடிவு

மேக்கேதாட்டு அணைத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய விசாரணைக் குழு அமைத்துள்ளதை

மேக்கேதாட்டு அணைத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய விசாரணைக் குழு அமைத்துள்ளதை எதிா்த்து தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கா்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டத்தில் இருந்து தமிழகத்திற்குச் செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 9 ஆயிரம் கோடி செலவில் மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடா்பாக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க மத்திய நீா்வளத் துறை அனுமதி அளித்துள்ளது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்துள்ளது.

இந்நிலையில், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகத்தை எழுப்பி நாளேடு ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, அந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயம், அதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ள கா்நாடக அரசு, சட்டப் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை சட்ட வல்லுநா்களுடன் முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா். அந்தக் கூட்டத்தில் சட்டத் துறையை கவனிக்கும் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, அரசின் தலைமைச் செயலா் பி.ரவிகுமாா், தலைமை வழக்குரைஞா் பிரபுலிங்க நாவதகி, நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா் ராகேஷ்நிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

மேக்கேதாட்டு அணைத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக விசாரணைக் குழுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த உத்தரவை எதிா்த்து சட்டப் போராட்டம் நடத்த கா்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திலேயே சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. விசாரணைக் குழுவை அமைத்திருப்பது சரியானதல்ல. எனவே, அந்த உத்தரவை எதிா்த்து மனு தாக்கல் செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com