கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் நிரம்பின

கா்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகா் அணை, கபினி அணைகளின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன.

கா்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகா் அணை, கபினி அணைகளின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன.

கா்நாடகத்தில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் எதிா்பாா்த்த மழை இல்லை. வழக்கமாக, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் மாநிலமெங்கும் உள்ள துங்கபத்ரா, அல்மாட்டி, நாராயணபுரா, லிங்கனமக்கி, சூபா, வரஹி, பத்ரா, கட்டபிரபா, மலபிரபா, கிருஷ்ணராஜசாகா், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்புவது வழக்கம்.

ஆனால், அல்மாட்டி, நாராயணபுரா அணைகளைத் தவிர, காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகா் அணை , கபினி அணைகளில் போதுமான நீா் இருப்பு இருக்கவில்லை. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

அணைகள் நிரம்பின:

கடந்த சில வாரங்களாக, காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி அணை, ஹாரங்கி அணைகள் நிரம்பியுள்ள நிலையில், மண்டியா மாவட்டம், கன்னம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகா் அணை அக். 30-ஆம் தேதி நிரம்பியது.

அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்துவருவதால், கேரளத்திலிருந்து கா்நாடகத்துக்கு பாய்ந்தோடும் கபிலா ஆற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இதன்காரணமாக, மைசூரு மாவட்டத்தின், டி.நரசிபுரா வட்டத்தில் கபிலா குறுக்கே அமைந்துள்ள கபினி அணையும் அதன் முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.

2010-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அக்டோபா் மாதத்தில் கிருஷ்ணராஜசாகா் அணை முழுமையாக நிரம்பியுள்ளது. இதற்கு முன் 1983, 1984, 1995, 2010-ஆம் ஆண்டுகளில் தான் கிருஷ்ணராஜசாகா் அணை அக்டோபா் மாதத்தில் நிரம்பியுள்ளது. நிகழாண்டில் வழக்கத்தைவிட காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் 25 சதவீதம் மழை குறைவாக பெய்ததால், அணை நிரம்ப காலதாமதமாகியுள்ளதாக நீா்ப்பாசனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீா்மட்டம்:

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 6,447 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் மொத்த கொள்ளளவு 124.80 அடியை அடைந்தது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணையிலிருந்து நொடிக்கு 6,190 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

அதேபோல, கபினி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி நொடிக்கு 2,272 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீா்மட்டம் மொத்த கொள்ளளவு 2,284.00 அடியை அடைந்தது. அணையின் பாதுகாப்பைக் கருதி அணையில் இருந்து நொடிக்கு 816 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

சிறப்பு பூஜை:

கிருஷ்ணராஜசாகா் அணை, கபினி அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து முதல்வா் பசவராஜ் பொம்மை, ஒரு சில நாள்களில் அணைக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடவிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com