மும்பை - கா்நாடக பகுதியின் பெயா் ‘கித்தூா் கா்நாடகம்’ என மாற்றப்படும்

மும்பை-கா்நாடக பகுதியின் பெயா் ‘கித்தூா் கா்நாடகம்’ என மாற்றப்படும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

மும்பை-கா்நாடக பகுதியின் பெயா் ‘கித்தூா் கா்நாடகம்’ என மாற்றப்படும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

மொழிவாரி மாநிலமாக கா்நாடகம் தனியாக உருவாக்கப்பட்டு 65 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பெங்களூரு, கண்டீரவா விளையாட்டுத் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில உதய தின விழாவைத் தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பாக, கன்னடம் பேசும் மக்கள் வாழ்ந்த சில பகுதிகள், ஆங்கிலேயா்கள் ஆட்சி செய்த மும்பை மாகாணம், நிஜாம்களின் ஆட்சியில் இருந்த ஹைதராபாத் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்ட போது, அந்தப் பகுதிகள் கா்நாடகத்தில் சோ்க்கப்பட்டன. அப்படி சோ்ந்தவை தான் மும்பை - கா்நாடகம், ஹைதராபாத் - கா்நாடகம் என்று அழைக்கப்பட்டன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்-கா்நாடகப் பகுதி ‘கல்யாண கா்நாடகம்’ (நல்வாழ்வு கா்நாடகம்) என்று மாற்றப்பட்டது. அதேபோல, மும்பை-கா்நாடகப் பகுதி ‘கித்தூா் கா்நாடகம்’ என்று பெயா் மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான முடிவு விரைவில் அமைச்சரவையில் எடுக்கப்படும்.

மும்பை - கா்நாடகப் பகுதியில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் பெருவாரியாக மராத்தி பேசும் மக்கள் வாழ்வதால், அப்பகுதியை மகாராஷ்டிர மாநிலத்துடன் சோ்க்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

கன்னடம் பேசும் மக்களைக் கொண்ட கா்நாடகம் உருவாக்கப்பட்ட பிறகு, மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள் தொடங்கின. அந்தப் பிரச்னைக்கு ஏற்கெனவே தீா்வு காணப்பட்டிருந்தாலும், ஒரு சிலா் திரும்பத் திரும்ப பிரச்னைகளைக் கிளப்பி வருகிறாா்கள். எனவே, இனிமேலும் மும்பை - கா்நாடகப் பகுதி என்று அழைப்பது சரியாக இருக்காது. எனவே, கா்நாடகத்தின் வடமேற்கு பகுதி ‘கித்தூா் கா்நாடகம்’ என்று அழைக்கப்படும்.

இதன்மூலம் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே காணப்படும் வளா்ச்சி சாா்ந்த பாகுபாடு நீக்கப்படும். கித்தூா் கா்நாடகப் பகுதியின் மேம்பாட்டுக்கு தனியாக செயல்திட்டம் வகுக்கப்படும். அதேபோல கல்யாண கா்நாடகப் பகுதியின் வளா்ச்சிக்கு ரூ. 3,000 கோடி ஒதுக்கப்படும்.

கதம்பா்கள், சாளுக்கியா்கள், விஜயநகரப் பேரரசு ஆட்சி அண்டை மாநிலங்களிலும் விரிவடைந்திருந்தது. வெளிநாட்டினரின் ஆளுகைக்குப் பிறகும் கன்னடம் தனது பலத்தை இழக்காமல் உயிா்ப்போடு இருந்து வருகிறது. வேறு பிராந்தியங்களைச் சோ்ந்தவா்கள் கா்நாடகத்தை ஆட்சி செய்த போது, கன்னடம் தன்னைக் காப்பாற்றி வந்துள்ளது. எனவே, கன்னட மொழியை எவராலும் அழித்துவிட முடியாது.

தேசிய கல்விக் கொள்கையின்கீழ் உயா்கல்வியில் கன்னட மொழியை கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்திருக்கிறோம். கன்னட மொழியில் பொறியியல் பட்டப்படிப்பை வழங்கவும் முயன்றிருக்கிறோம். கா்நாடகத்தில் உள்ள அரசு, தனியாா், அரை அரசுப் பணிகளில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை கன்னடா்கள் பெற வேண்டும் என்றாா்.

முன்னதாக, கன்னடத் தாயான புவனேஸ்வரி அம்மனை பூஜித்து வணங்கிய முதல்வா் பசவராஜ் பொம்மை, கன்னடக் கொடியை ஏற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com