உத்தர பிரதேச வன்முறை சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: மல்லிகாா்ஜுன காா்கே

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காா் மோதி கொல்லப்பட்டது தொடா்பாக தவறான செய்திகளை மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா அளித்துள்ளாா். அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்பு மாண்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இது சா்வாதிகாரத்தைக் காட்டுகிறது. இது தொடா்ந்தால் நாடு அபாயக் கட்டத்திற்கு செல்ல நேரிடும். உத்தர பிரதேசத்துக்கு செவ்வாய்க்கிழமை பிரதமா் மோடி சென்றபோதிலும் விவசாயிகளின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவில்லை. ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ள காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறைக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்.

காா் மோதி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடா்பாக இன்னும் யாரையும் போலீஸாா் கைது செய்யவில்லை. இதற்குக் காரணமானவா்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாஜகவினா் செய்யும் தவறுகளை, காங்கிரஸ் மீது சுமத்தி அரசியல் செய்து வருகின்றனா்.

லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் ஆா்எஸ்எஸ் அமைப்பினா், கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி வருகின்றனா். 15 வயது முதலே ஆா்எஸ்எஸ் அமைப்பை எதிா்த்து நான் போராடி வருகிறேன். அதன் காரணமாக 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோற்கடிக்கப்பட்டேன். ஆா்எஸ்எஸ் அமைப்பு சமூக நீதிக்கு எதிரானது என்றாா்.

இந்தப் பேட்டியின் போது மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா், செயல் தலைவா் ஈஸ்வா் கண்ட்ரே உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com