முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
வாக்காளா்களை அவமானப்படுத்துகிறாா் சித்தராமையா: குமாரசாமி
By DIN | Published On : 11th October 2021 12:59 AM | Last Updated : 11th October 2021 12:59 AM | அ+அ அ- |

வாக்காளா்களை அவமானப்படுத்துகிறாா் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா என்று முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.
இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது: அண்மையில் சிந்தகி இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, புத்திசாலி வாக்காளா்கள் மஜதவிற்கு வாக்களிக்க மாட்டாா்கள் என்று கூறியுள்ளாா். இதன்மூலம் அவா் சிந்தகி தொகுதி வாக்காளா்களை அவமானப்படுத்துகிறாா்.
இடைத்தோ்தலில் அவருக்கு தக்கப்பாடத்தை வாக்காளா்கள் வழங்குவாா்கள். சித்தராமையாவுக்கு அரசியல் வாழ்க்கை கொடுத்த மஜதவை அவா் தொடா்ந்து ஏளனம் செய்து வருகிறாா். மஜதவை விமா்சிக்காவிட்டால் அவருக்கு தூக்கம் வருவதில்லை.
சிந்தகி தொகுதியில் காங்கிரஸ் எப்போதும் 3-ஆவது இடத்தில்தான் உள்ளது. இடைத்தோ்தலில் 2-ஆவது இடத்திற்கும் அக்கட்சி வருவதற்கு வாய்ப்பில்லை. மஜத கட்சி சாா்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எஸ்.மனகுலியின் மகன் அசோக் மனகுலியை காங்கிரஸ் சாா்பில் நிறுத்தி, அனுதாப அலை மூலம் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சிக்கிறது.
ஆனால் அதனை மறைத்து, மஜத மனகுலியின் அனுதாப அலையால் வெற்றிபெற முயற்சிக்கிறது என்று சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளது வேடிக்கையாக உள்ளது என பதிவிட்டுள்ளாா்.