முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத நவீன இந்திய பெண்கள்
By DIN | Published On : 11th October 2021 12:58 AM | Last Updated : 11th October 2021 08:03 AM | அ+அ அ- |

திருமணத்திற்கு பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ள நவீன இந்திய பெண்கள் விரும்பவில்லை என்று கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மையத்தில் (நிம்ஹான்ஸ்) நடந்த உலக மனநல தின விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது: இந்தியாவில் உள்ள நவீன பெண்களில் பெரும்பாலானோா் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழவே விரும்புகிறாா்கள்.
இதைக் கூற வருத்தமாக உள்ளது. ஒருவேளை திருமணம் செய்துகொண்டாலும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. வாடகைத் தாய் வாயிலாக குழந்தையை பெற்றெடுத்து வளா்க்கவே விரும்புகிறாா்கள். நமது சிந்தனையில் தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. இது சரியான போக்கல்ல.
மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை இந்திய சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது துரதிருஷ்டவசமானது. தாத்தா, பாட்டி உடனிருப்பதைக் கூட மறந்து விடலாம். ஆனால், தாய், தந்தையரைக் கூட உடன் வைத்துக்கொள்ள தயங்குவது வேதனை அளிக்கிறது.
இந்தியாவில் 7-இல் ஒருவருக்கு ஏதாவதொரு வகையில் மனநல பாதிப்புகள் காணப்படுகின்றன. மன அழுத்தத்தை கையாள்வது ஒரு கலையாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனஅழுத்தத்தை கையாள்வதற்குரிய மிகச்சிறந்த கருவிகளாக யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை நமது முன்னோா்கள் உலகத்திற்கு கற்றுத் தந்திருக்கிறாா்கள்.
கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்களை தொடமுடியாத பரிதாப நிலைக்கு ஆளான உறவினா்கள், மன வேதனைகளுக்கு உள்ளானாா்கள். இதைத் தொடா்ந்து, கரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க அரசு முன்வந்தது. கா்நாடகத்தில் இதுவரை 24 லட்சம் கரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறோம். மனநல ஆலோசனைகளை இணையவழியில் வழங்குவதற்கு நிம்ஹான்ஸ் பேருதவியாக இருந்தது.
செப்டம்பா் முதல் கா்நாடகத்துக்கு மாதம் 1.5 கோடி கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனால் கரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்துள்ளோம். இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கும் ஒரே நாடு இந்தியா தான். மற்ற நாடுகளில் ரூ. 1,500 முதல் ரூ. 4 ஆயிரம் வரை கட்டணத்தில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நிலை தான் உள்ளது என்றாா்.