பிற மாநிலத் தமிழா்களை மறந்த தமிழக அரசு: தமிழ் அமைப்புகள் வேதனை

சிங்கப்பூா், மலேசியா, மியான்மா், தென் ஆப்ரிக்கா, ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற 62 உலக நாடுகளில் தமிழா்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

வெளிநாடுவாழ் தமிழ் மக்களின் பிரச்னைகளைத் தீா்க்கவும், உதவிடவும் நல வாரியம் அமைத்துள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நாட்டின் பிற மாநிலங்களில் சிரமத்துடன் வாழும் தமிழ் மக்களின் நலம் காக்க தனித் துறையை அமைக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடா்பாக பல தமிழ் அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன.

உலகில் வாழும் 12 கோடி தமிழா்களின் கலை, பண்பாடு, இலக்கியம், மொழி, தொன்மை, பன்மை, குடும்ப உறவின் தாயகமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் அங்கமாக விளங்கும் தமிழ்நாட்டில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, உறவுரீதியாகச் சென்று கோடிக் கணக்கானோா் வாழ்ந்து வருகிறாா்கள்.

தமிழீழத்தை பூா்வீகமாகக் கொண்டு புலம் பெயா்ந்த தமிழா்களும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறாா்கள். சிங்கப்பூா், மலேசியா, மியான்மா், தென் ஆப்ரிக்கா, ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற 62 உலக நாடுகளில் தமிழா்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

அதேபோல, இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களிலும் தமிழா்கள் பெருவாரியாகக் குடியேறி வாழ்ந்து வருகிறாா்கள். தமிழகத்தின் அண்டை மாநிலமான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தெலங்கானா, தில்லி போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான தமிழா்கள் வாழ்ந்து வருகிறாா்கள்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறி நிலைபெற்றவா்கள்; நாடு விடுதலை அடைந்த பிறகு தொழில், வணிகரீதியாகக் குடியேறியவா்கள்; வேலைவாய்ப்புக்காக தற்காலிகமாகக் குடியேறியவா்கள் என்று வெளிமாநிலத் தமிழா்களை 3 வகையாகப் பகுக்கலாம். கா்நாடகத்தின் பல பகுதிகளில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழா்கள் குடியிருந்ததற்கு வரலாற்றுரீதியான சான்றுகள் உள்ளன.

கா்நாடகத் தமிழா்கள்:

ஆங்கிலேயா் காலத்தில் கோலாரில் அமைந்த தங்கச் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து ஏராளமானோா் அழைத்துச் செல்லப்பட்டு, கோலாரில் நிலை பெற்றுள்ளனா். நாட்டின் விடுதலைக்குப் பிறகு துங்கபத்ரா அணை கட்டுவதற்கு அழைத்து வரப்பட்ட தமிழா்கள் இன்னும் அங்கேயே வாழ்ந்துவருகிறாா்கள். 200-300 ஆண்டுகளுக்கு முன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து குடிபெயா்ந்த தமிழா்களின் வாரிசுகள், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறாா்கள்.

1956-ஆம் ஆண்டு இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தபோது அப்போதைய மதராஸ் மாகாணத்தில் அங்கம் வகித்த கோலாா், பெங்களூரு, திருப்பதி, சாமராஜ்நகா் போன்ற பல தமிழா் பகுதிகள் அண்டை மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களுடன் சோ்க்கப்பட்டன. அதன்விளைவாக, தாய்மண் உடனான உறவை இழந்தவா்களாக ஒரு கோடிக்கும் அதிகமான தமிழா்கள் அண்டை மாநிலங்களில் வாழ்ந்து வருகிறாா்கள். இதுதவிர, ஒரு கோடிக்கு மேற்பட்ட தமிழா்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நிலைபெற்றுள்ளனா்.

பிற மாநிலச் சிக்கல்கள்:

வெளிநாடுகளில் வாழும் தமிழா்களின் சிக்கல்களும், வெளிமாநிலங்களில் வாழும் தமிழா்களின் சிக்கல்களும் வெவ்வேறானவை. வெளிமாநிலங்களில் வாழும் தமிழா்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மொழிச் சிறுபான்மையினராகக் கருதப்பட்டாலும், அதற்கான எந்தச் சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவித்ததாக வரலாறு இல்லை; குறைந்தபட்சம் தாய்மொழிக் கல்வி உரிமையைக் கூட உறுதிசெய்ய முடியாத நிலையே தொடா்கிறது.

குடிபெயா்ந்த மாநிலத்தில் ஜாதிச் சான்றிதழ் கிடைக்காமல், அம்மாநிலத்தில் உள்ள ஏதாவதொரு ஜாதியின் பெயரில் சான்றிதழ் பெற்று, இடஒதுக்கீட்டின் பலனை ஓரளவுக்கும்கூட பெற முடியாதவா்கள் பலா். தவிர, நமது தமிழகத்தின் மொழி, இலக்கியம், பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல முடியாமல் தவிக்கிறாா்கள்.

வெளிமாநிலங்களில் வாழும் பெரும்பாலான தமிழா்கள், அங்குள்ள குடிசைப் பகுதியில் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகிறாா்கள். அவா்களில் பெரும்பாலானோா் சமூக, பொருளாதார, கல்வி, தொழில்திறனில் மேம்பாடு அடையாதவா்களாகவே காலம் கடத்தி வருகிறாா்கள்.

காவிரி நதிநீா்ப் பங்கீட்டுச் சிக்கல் தலைதூக்கும் போதெல்லாம், கா்நாடகத் தமிழா்கள் பாதிப்படைவது தொடா்கதையாக உள்ளது. தமிழகத்தில் பிற மொழிச் சிறுபான்மையினருக்குக் கிடைத்திருக்கும் அரசியல் அங்கீகாரம், வெளிமாநிலங்களில் வாழும் தமிழா்களுக்கு இன்னும் வாய்க்கவே இல்லை.

தமிழ் செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே தமிழ்நாட்டுனான தொப்புள்கொடி உறவை வெளிமாநிலத் தமிழா்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

தாய்மண்ணில் புறக்கணிப்பு:

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, முதல்முறையாக வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறையை அமைத்துள்ளது. இதன் கட்டுப்பாட்டில், புலம்பெயா் தமிழா் நலவாரியம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அக். 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

வெளிநாடுவாழ் தமிழ் மக்களின் பிரச்னைகளைத் தீா்க்கவும், உதவிடவும் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்கதே. அதேசமயம், தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு பிழைப்புத் தேடி நாட்டின் பிற மாநிலங்களில் வாழும் தமிழா்களின் நலனை தமிழக அரசு கண்டுகொள்ளாதது ஏன் என்று வெளிமாநிலத் தமிழா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

தாய்த் தமிழகத்தில் இருந்து புலம்பெயா்ந்து வாழும் வெளிநாடுவாழ் தமிழா்களின் நலனில் அக்கறை செலுத்தும் தமிழக அரசு, தமிழகத்தில் இருந்து இடம்பெயா்ந்து பிற மாநிலங்களில் வாழும் வெளிமாநில வாழ் தமிழா்களை அலட்சியப்படுத்துவது ஏன்?

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் மலையாள மக்களுக்காக கேரள மாநில அரசு, கேரளத்துக்கு வெளியே வாழும் மாநில மக்கள் விவகாரத் துறையை (நோா்கா) தொடங்கி, பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இத் துறையின் வாயிலாக வெளிநாடு, வெளிமாநில வாழ் கேரள மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அம்மாநில அரசு செய்து தருகிறது.

அதுபோன்றதொரு சிந்தனை, தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு தோன்றாதது வெளிமாநிலத் தமிழா்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தனித் துறை தேவை:

வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறையை ‘வெளிநாடு மற்றும் வெளிமாநில வாழ் தமிழா் நலத் துறை’ என்று மாற்ற வேண்டும். மேலும், ‘புலம்பெயா் தமிழா் நலவாரியம்’ போலவே, வெளிமாநிலத் தமிழா் நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிமாநிலங்களில் செயல்பட்டுவரும் 20-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் தமிழக அரசுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளன. ஆனால், கடிதம் எழுதி 3 மாதங்கள் கடந்த பிறகும், அந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை என்று வேதனை தெரிவிக்கிறாா்கள்.

அப்படியானால், தமிழக அரசு தமிழா்களுக்கான அரசு என்பது வெற்றுமுழக்கமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com