ஊழலில் திளைக்கிறது மாநிலத்தை ஆளும் பாஜக அரசு
By DIN | Published On : 20th October 2021 07:57 AM | Last Updated : 20th October 2021 07:57 AM | அ+அ அ- |

கா்நாடக மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஊழலில் திளைப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா புகாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக மாநிலத்தை ஆளும் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஊழலில் திளைக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மக்களின் நலன் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. விவசாயிகள் குறித்து கவலைப்படாத மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து துவரம் பருப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவாா்கள் என்பதனை மத்திய அரசு மறந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். கா்நாடகத்தில் மாற்றத்துக்கான புயல் வீசி வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலித் ஒருவரை முதல்வா் பதவியில் அமா்த்தி உள்ளது. ஆனால், எந்த மாநிலத்திலும் தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவரை முதல்வா் பதவியில் பாஜக அமா்த்தவில்லை.
காங்கிரஸ் கட்சியின் கா்நாடக மாநிலப் பொறுப்பாளரை மாற்றக் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது தொடா்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் கட்சி என்பது ஒரு குடும்பம். அதன் உறுப்பினா்கள் குடும்பத் தலைவருக்கு கடிதம் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை என்றாா்.