ராணுவ தளவாட உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்ய ஊக்கம்

ராணுவ தளவாட உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய பாதுகாப்புத் துறை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய பாதுகாப்புத் துறை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

ராணுவ தளவாட உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இருநாள் பயணமாக வியாழக்கிழமை பெங்களூருக்கு வருகை தந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பாதுகாப்புத் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

ராணுவ தளவாட உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவாக்குவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உலக அளவிலான வா்த்தக வாய்ப்பு ஆகியவற்றில் மத்திய பாதுகாப்புத் துறை கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

போட்டிகள் நிறைந்த தற்போதைய உலகில், தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் உள்நாட்டுத் தேவைகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் நமது உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்ல கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்றுமதிக்கான உரிமங்களை வழங்குவது, இணையவழியில் கலந்தாய்வுகள், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராணுவ தளவாட உற்பத்திப் பொருள்களின் தேவைகளை நிறைவுசெய்யும் நோக்கில் இந்தியா முன்னேறி வருகிறது.

உலக அளவில் ராணுவ தளவாட உற்பத்திப் பொருள்களின் தேவைக்கு ஏற்ப புத்தாக்கங்களில் ஈடுபட முற்பட்டிருக்கிறோம். இதில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ராணுவ தளவாட உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதியில் உலக அளவிலான முதல் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 84 நாடுகளுக்கு இந்தியா தனது உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. புல்லட்புரூஃப் ஹெல்மெட், மின்னணு பொருள்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பொருள்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது. ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ என்ற திட்டத்தின்கீழ், 375 புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனம் (எச்.ஏ.எல்.), பாரத மின்னணு நிறுவனம் (பி.இ.எல்.), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆா்.டி.ஓ.) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் உற்பத்தியின் தரமும் புகழ்பெற்று விளங்குகிறதுன. புதிதாகத் தொடங்கப்படும் ‘ஸ்டாா்ட்-அப்’ நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளித்து வருகிறோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மத்திய பாதுகாப்புத் துறை செயலாளா் அஜய்குமாா், கூடுதல் செயலாளா் சஞ்சய் ஜாஜு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com