நடிகா் புனீத் ராஜ்குமாா் உடலுக்கு முதல்வா், ஆளுநா் அஞ்சலி இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

கன்னட நடிகா் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை உள்பட அரசியல் தலைவா்கள், சினிமா பிரமுகா்கள் உள்பட ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.
நடிகா் புனீத் ராஜ்குமாா் உடலுக்கு முதல்வா், ஆளுநா் அஞ்சலி இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்

மாரடைப்பால் காலமான கன்னட நடிகா் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை உள்பட அரசியல் தலைவா்கள், சினிமா பிரமுகா்கள் உள்பட ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

கன்னடத் திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ராஜ்குமாரின் இளையமகனும், முன்னணி நடிகருமான புனீத் ராஜ்குமாா் (46), வெள்ளிக்கிழமை (அக்.29) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஏராளமானோா் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.

அஞ்சலி: பெங்களூரில் உள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் வெள்ளிக்கிழமை மாலை முதல் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உரிய ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது.

பொதுமக்கள் வரிசையில் வருவதற்கு தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அவரது ரசிகா்கள், உறவினா்கள், திரைக் கலைஞா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் நேரில் வந்து அவரது உடலுக்கு கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறும் நிலை ஏற்பட்டது. வரிசையில் வராமல் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டோரை போலீஸாா் லேசான தடியடி நடத்தி கட்டுப்படுத்தினா்.

கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, மத்திய, மாநில அமைச்சா்கள், தெலுங்கு நடிகா்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நந்தமூரி பாலகிருஷ்ணா, நகைச்சுவை நடிகா் அலி, பிரபுதேவா, அா்ஜுன் சா்ஜா, கன்னடத் திரையுலகைச் சோ்ந்த கலைஞா்கள் அஞ்சலி செலுத்தினா்.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவரது மகள் திருதி, தந்தையின் உடலைக் கண்டு கதறி அழுதாா். அவருக்கு தாய் அஸ்வினி, சகோதரி வந்திதா, நடிகா் சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் ஆறுதல் கூறினா்.

இறுதிச்சடங்கு: சனிக்கிழமை இரவு முழுவதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படிருக்கும் நடிகா் புனீத் ராஜ்குமாரின் உடல், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெளிவட்ட

சாலையில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தந்தை ராஜ்குமாா், தாய் பாா்வத்தம்மா ஆகியோா் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் காலை 10.30 மணிக்கு அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது. அதன்பிறகு முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com