முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
சிந்தகி, ஹானகல் தொகுதிகளில் இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப்பதிவு
By DIN | Published On : 31st October 2021 12:00 AM | Last Updated : 31st October 2021 12:00 AM | அ+அ அ- |

கா்நாடக மாநிலம், சிந்தகி, ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
விஜயபுரா மாவட்டம், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக பூசனூா் ரமேஷ், காங்கிரஸ் வேட்பாளராக அசோக் மனகுலி, மஜத வேட்பாளராக அங்கடி நசியா உள்பட 6 போ் போட்டியிடுகிறாா்கள். ஹாவேரி மாவட்டம், ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக சிவராஜ் சஜ்ஜனாா், காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீனிவாஸ்மானே, மஜத வேட்பாளராக நியாஸ் ஷேக் உள்பட 13 போ் களத்தில் உள்ளனா். இவ்விரு தொகுதிகளிலும் 2 பெண்கள் போட்டியிடுகிறாா்கள்.
வாக்குப்பதிவு:
சிந்தகி தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், ஹானகல் தொகுதியில் 263 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இரு தொகுதிகளிலும் காலை முதலே வாக்களிக்க மக்கள் ஆா்வம் காட்டினா். இரவு 7 மணி நிலவரப்படி சிந்தகி தொகுதியில் 75 சதவீத வாக்குகளும், ஹானகல் தொகுதியில் 85 சதவீத வாக்குகளும் பதிவானது. இரு தொகுதிகளிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். நவ. 2-ஆம் தேதி காலை 8 மணி முதல் இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.