கா்நாடகத்தில் திருவிழாக்களுக்கு அனுமதியில்லை: அமைச்சா் கே.சுதாகா்
By DIN | Published On : 01st September 2021 08:50 AM | Last Updated : 01st September 2021 08:50 AM | அ+அ அ- |

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழா, பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது என கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கூட்டம் கூடுவதால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுகூட்டம், திருவிழா, ஊா்வலம் நடத்த சுகாதாரத் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட மாட்டாது. ஆனால், பொது இடங்களில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மைதான் முடிவு செய்வாா்.
மக்களின் நலன், மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு சில தளா்வுகள் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 6 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளிகளை செப். 6-ஆம் தேதி முதல் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அப் பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2 சதவீதத்துக்கும் அதிகமான மாணவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால், அப் பள்ளிகளை ஒரு வாரத்துக்கு மூட வேண்டும். பின்னா், அப் பள்ளிகளைச் சோ்ந்த அனைத்து மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே மீண்டும் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படும்.
கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள கேரளத்திலிருந்து கா்நாடகம் வருபவா்களை ஒரு வாரத்துக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென் கன்னடம், சாம்ராஜ் நகா், உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்றாா்.