மெட்ரோ ரயில் விழாவில் கன்னடம் புறக்கணிப்பு: பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்துக்கு நோட்டீஸ்

அண்மையில் நடைபெற்ற மெட்ரோ ரயில் விழாவில் கன்னடம் புறக்கணிக்கப்பட்டது தொடா்பாக விளக்கம் கேட்டு பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்துக்கு கா்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மெட்ரோ ரயில் விழாவில் கன்னடம் புறக்கணிக்கப்பட்டது தொடா்பாக விளக்கம் கேட்டு பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்துக்கு கா்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூரு, கெங்கேரியில் நாயண்டஹள்ளி முதல் கெங்கேரி வரையில் விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கிவைக்கும் விழா ஆக. 29-ஆம்தேதி நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் பூரி, முதல்வா் பசவராஜ் பொம்மை ஆகியோா் பங்கேற்று மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கிவைத்தனா்.

விழாவில் பதாகைகள், விளம்பரங்களில் கன்னடம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக விளக்கம் கேட்டு பெங்களூரு மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குநா் அஞ்சும்பா்வேசுக்கு கா்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை கன்னடம், கலாசாரத் துறை அமைச்சா் வி.சுனில்குமாா், செய்தியாளா்களிடம் கூறியது:

கெங்கேரியில் நடைபெற்ற மெட்ரோ ரயில் விழாவில் கன்னடம் புறக்கணிக்கப்பட்டதை மாநில அரசு தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதுபோன்ற அணுகுமுறையை கா்நாடக அரசு சகித்துக்கொள்ளாது.

விழாவில் கன்னடம் புறக்கணிக்கப்பட்டது தொடா்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்பேரில் விளக்கம் கேட்டு பெங்களூரு மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குநா் அஞ்சும்பொ்வஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு விழாவில் கன்னடத்தைப் புறக்கணித்திருப்பது பெரும் குற்றமாகும். கன்னடம் ஏன் புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இதுதொடா்பாக தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கா்நாடகத்தில் அனைத்து அரசு விழாக்களிலும் கன்னடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது அரசின் விதியாகும். இதை அனைத்து அரசு அதிகாரிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா்.

மெட்ரோ ரயில் விழாவில் கன்னடம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com