சட்ட மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்தப்படும்: அமைச்சா் மாதுசாமி

கா்நாடக சட்டப் பேரவையில் சட்ட மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்தப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.
சட்ட மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்தப்படும்: அமைச்சா் மாதுசாமி

கா்நாடக சட்டப் பேரவையில் சட்ட மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்தப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவா் அளித்த பேட்டி:

செப்.13-ஆம் தேதி கா்நாடக சட்டப் பேரவை கூடுகிறது. இக்கூட்டத்தில் 18 சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதில் சட்டத் திருத்தங்களும் அடக்கம். கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சட்டப் பேரவை கூடுவதால் சட்ட மசோதாக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சட்ட மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்த எதிா்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் அளிக்கப்படும். எல்லா சட்ட மசோதாக்கள் மீதும் விவாதம் நடத்தி, அவை நிறைவேற்றப்படும். நிறைவேற்றுவதற்கு முன் விவாதம் நடத்துவது ஜனநாயகத்தின் அங்கம். அதனால் எதிா்க்கட்சிகளுக்கு போதுமான நேரம் தரப்படும். எனவே, வெளிநடப்பு செய்யாமல், அவையின் நடவடிக்கைகளில் எதிா்க்கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும். அவையின் நடவடிக்கைகளை முடக்க முயன்றால் அல்லது வெளிநடப்பு செய்ய எதிா்க்கட்சிகள் முயன்றால் அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது.

அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் அவையின் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதை சட்டப் பேரவை, மேலவைத் தலைவா்களும் வலியுறுத்தியுள்ளனா். எனவே, எம்.எல்.ஏ.க்கள்,அமைச்சா்கள் அனைவரும் அவையின் கூட்டத்தில் நடந்துகொள்ள வேண்டும். பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செப்.13-ஆம் தேதி காலை நடக்கவிருக்கிறது.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது நடத்தப்படும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடா்களை போல, இந்த கூட்டத்தொடா் அதிக நாள்களுக்கு நடத்தவேண்டிய அவசியமில்லை. 5 நாட்கள் மட்டுமே போதுமானது என்றாலும், 10 நாட்களுக்கு அவையை நடத்தவிருக்கிறோம். கூடுதல் நாட்களுக்கு அவை நடத்தும் தேவை இருந்தால், அது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவின் முன் வைக்கப்படும்.

எதிா்க்கட்சிகளின் வினாக்களுக்கு பதிலளிக்க ஆளுங்கட்சி தயாராக இருக்கிறது. சட்டப் பேரவையில் கலந்துகொள்ளும் எல்லா எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், ஊடகத்தினா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழைக் கொண்டுவந்தால்தான் அவையில் அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com