தேசிய கல்விக் கொள்கை பற்றி விவாதிக்க அரசு தயாா்: முதல்வா் பசவராஜ் பொம்மை
By DIN | Published On : 16th September 2021 02:05 AM | Last Updated : 16th September 2021 02:05 AM | அ+அ அ- |

பெங்களூரு: தேசிய கல்விக் கொள்கை பற்றி விவாதிக்க மாநில அரசு தயாராக உள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காலத்திற்குத் தகுந்தவாறு, இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வியை அளித்து, ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவதற்காகவே தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை, சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கும்.
தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்தறியப்பட்டுள்ளது. அதேபோல, எல்லா இடங்களிலும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தி, கல்வியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்களின் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை மாணவா்களுக்கு தெளிவாக்க மாநில அரசு முயற்சி மேற்கொள்ளவிருக்கிறது.
நிகழ் கல்வியாண்டில் இருந்து உயா்கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. ஆரம்ப மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து அறிக்கை கேட்டிருக்கிறேன். தேசிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் உள்ளன. எல்லோருடைய கருத்துகளையும் அறிந்த பிறகே தேசிய கல்விக் கொள்கையை அரசு அமல்படுத்தும். அதனால் அவசியமில்லாமல் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
பெங்களூரில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளின் தரம் குறைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முழுமையான அறிக்கை அளிக்கும்படி பெங்களூரு மாநகராட்சியிடம் கேட்டிருக்கிறேன் என்றாா்.