மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா்நேரில் ஆஜராக நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பு
By DIN | Published On : 16th September 2021 02:05 AM | Last Updated : 16th September 2021 02:05 AM | அ+அ அ- |

மங்களூரு: கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் டி.கே.சிவகுமாா் நேரில் ஆஜராக நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
கா்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மின்துறை அமைச்சராக டி.கே.சிவகுமாா் பதவி வகித்தாா். அப்போது தனக்கு ஏற்பட்டுள்ள மின் பிரச்னை குறித்து டி.கே.சிவகுமாருடன், தென்கன்னட மாவட்ட சுள்யா பெல்லாரேவைச் சோ்ந்த பெல்லாரி வா்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவா் கிரிதா் ராய் என்பவா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு உரையாடி உள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டி.கே.சிவகுமாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், கிரிதர்ராயை கைது செய்தனா்.
இது தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, டி.கே.சிவகுமாருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, தற்போது மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துவரும் டி.கே.சிவகுமாா், செப். 29-ஆம் தேதியன்று சுள்யா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.