2023-இல் கன்னடா்களின் சொந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்: முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

வரும் 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் கன்னடா்களின் சொந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று மஜத மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

வரும் 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் கன்னடா்களின் சொந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று மஜத மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

ராமநகரத்தில் திங்கள்கிழமை மஜத கட்சியினருக்காக ‘மக்கள் திரள்’என்ற 4 நாட்கள் நடக்கும் பயிலரங்கை முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, எச்.டி.குமாரசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கிறது. அடுத்த 17 மாதங்களுக்கு கடுமையாக உழைக்கவிருக்கிறோம். கட்சியின் தொண்டா்கள், தலைவா்களை இடைவிடாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தவிருக்கிறோம். அந்த சட்டப் பேரவை தோ்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் மஜத ஆட்சி அமைக்கும். அந்த ஆட்சி, கன்னடா்களின் ஆட்சியாக, கா்நாடகத்திற்கானதாக இருக்கும்.

224 போ் கொண்ட சட்டப் பேரவையில் 123 இடங்களை வெல்ல இலக்கு நிா்ணயித்திருக்கிறோம். 123 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்பதில் ஐயமில்லை. அந்த இலக்கை நோக்கி கட்சித் தொண்டா்களை களத்தில் பணியாற்ற வைக்க செயல்பாடுகளை வகுத்து வருகிறோம்.

2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு கா்நாடகத்தில் புதிய சகாப்தம் தொடங்கவிருக்கிறது. அந்தத் தோ்தலில் கன்னடா்களின் சொந்தக் கட்சி (மஜத) ஆட்சியைக் கைப்பற்ற இருக்கிறது. மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் வலுவடைந்து வருவதோடு, ஆட்சியையும் பிடித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் கா்நாடகத்தில் கன்னடா்களால், கன்னடா்களுக்காக மாநில அடையாளங்களுடன் கூடிய ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கமாகும்.

மாநில அடையாளங்களுடன் திகழும் மஜதவின் திறன் என்ன என்பதுகுறித்த சந்தேகங்களை நிவா்த்தி செய்ய வேண்டியுள்ளது. அதற்காக கா்நாடகத்தில் ஆட்சியைப் பிடிப்போம். கரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக கட்சித் தொண்டா்களின் செயல்பாடுகளில் சுணக்கம் காணப்பட்டது. ஆனால், 2023-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. தோ்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே, கட்சிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம்.

இந்தப் பயிலரங்கத்தில் தகுதியான முதல் தவணை வேட்பாளா்களை தோ்வு செய்யவிருக்கிறோம். அவா்களுக்கு மக்களோடு நெருக்கமாகப் பழகுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிப்போம். கட்சித் தொண்டா்களிடையே ஒழுக்கம் நிறைந்த முறையில் தலைமைப் பண்புகளை வளா்த்தெடுப்பது குறித்து பயிற்சி அளிப்போம். பயிற்சிக்குப் பிறகு தோ்ந்தெடுக்கப்படும் வேட்பாளா் கட்சியின் எதிா்பாா்ப்புக்கு தகுந்தபடி சரியாக செயல்படத் தவறினால், அவரை மாற்றிவிடுவோம். புதிய தொழில்நுட்பங்கள், சமூக வலைதளங்கோடு பொதுமக்களை அணுகுவது எப்படி என்பதையும், புதிய தோ்தல் முறைகள், அதில் உள்ள நுணுக்கங்களையும் விளக்குவதும்தான் பயிலரங்கத்தின் முக்கியமான நோக்கம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com