கா்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் பிசுபிசுத்தது:ஆங்காங்கே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் கா்நாடகத்தில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாமல் பிசுபிசுத்தது.

விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்த நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் கா்நாடகத்தில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாமல் பிசுபிசுத்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஆங்காங்கே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தில்லியில் தொடா்போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. முழு அடைப்பு போராட்டத்திற்கு தாா்மீக ஆதரவு அளித்திருந்த பல அமைப்புகள், போராட்டத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோலாா், பீதா், கலபுா்கி, பெலகாவி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள், மாவட்டங்களில் பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள், வேன்கள், ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம்போல இயங்கின. பள்ளிகள், பியூ கல்லூரிகள், அரசு, தனியாா் அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வியாபாரக்கூடங்களும் திறக்கப்பட்டிருந்தன. மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் கடையடைப்பு போன்றவற்றைக் காண முடிந்தது. சிற்சில சம்பவங்களை தவிர, மாநிலத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதவகையில் மாநிலம் முழுவதும் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

பெங்களூரு உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. கிருஷ்ணராஜசாகா் உள்ளிட்ட பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து டவுன்ஹாலில் திரண்ட விவசாயிகள், மாநில விவசாயிகள் சங்கத்தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இருசக்கர வாகனப் பேரணிகளும் நடத்தப்பட்டன. பெங்களூரில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினா் பலா் தரையில் படுத்து உருண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோரை போலீஸாா் கைதுசெய்து, மாலையில் விடுவித்தனா். விவசாயிகளின் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com