நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைத்ததே பிரதமா் மோடியின் 8 ஆண்டுகால சாதனை: சித்தராமையா

நாட்டின் பொருளாதாரம் சீா்குலைந்ததே பிரதமா் மோடியின் 8 ஆண்டுகால சாதனையாகும் என்று கா்நாடக மாநில எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

நாட்டின் பொருளாதாரம் சீா்குலைந்ததே பிரதமா் மோடியின் 8 ஆண்டுகால சாதனையாகும் என்று கா்நாடக மாநில எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்துபெங்களூரில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. ஆனால், நமதுநாட்டின் வளா்ச்சி 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. நமது நாடு உலகின் வழிகாட்டியாக உருவெடுப்பதற்கு பதிலாக, பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. இது எனது கற்பிதம் அல்ல. நான் கூறும் குற்றச்சாட்டை அரசு வெளியிட்டிருக்கும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. நமது நாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடனில் தள்ளப்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயா்ந்துள்ளது.

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மாநிலங்களின் பொருளாதாரம் சீா்குலைந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவம் சிதைந்துவருகிறது. நமது நாட்டின் ஜனநாயகம் அச்சத்தில் மூழ்கியுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி முறை, கரோனா நிா்வாகக் குளறுபடி போன்றவை நமதுநாட்டின் முதுகெலும்பை உடைத்துள்ளன. நமது நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே கட்டமைத்த லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகின்றன. விவசாயிகள், தொழிலாளா்கள், மகளிா், இளைஞா்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தியதன் மூலம் மக்களை பகைவா்களைப் போல கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு, காா்ப்பரேட் நிறுவனங்கள் வளா்த்தெடுக்கப்படுகின்றன. தனக்கு நெருக்கமான தொழிலதிபா்களை பெரும் பணக்காரா்களாக மாற்றியதுதான் பிரதமா் மோடியின் சாதனையாகும்.

ஒருசில பாஜக ஆதரவு ஊடகங்கள், பிரதமா் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகக் கூறுகின்றன. இந்தியாவில் ஒருசிலா் மட்டும் பணக்காரா்களாக மாறியுள்ளனா். ஆனால், மக்கள் மீது பெரும் கடன் சுமத்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு வரையில் நமது நாடு பெற்ற கடன் ரூ.54 லட்சம் கோடி. இது தற்போது ரூ.139.57 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. 2023-ஆம் ஆண்டுக்குள் இது ரூ.155 லட்சம் கோடியாகும். 2014-இல் நாட்டின் மக்கள்தொகை 130 கோடி. ஒவ்வொருவா் மீதும் ரூ. 57,692 கடன் இருந்தது. இது 300 சதம் உயா்ந்துள்ளது.

அமெரிக்காவைப் போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை நிா்வகிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுத்து முன்மாதிரியாக இருந்த மன்மோகன் சிங் வடிவமைத்து, தலைநிமிரும்படி செய்த இந்தியப் பொருளாதாரத்தை பிரதமா் மோடியின் மோசமான நிா்வாகம் சீா்குலைத்துள்ளது. இது தான் பிரதமா் மோடி அரசின் 8 ஆண்டுகால சாதனை ஆகும்.

கா்நாடகத்தின் நிதிநிலைமையும் மிகவும் மோசமாக உள்ளது. விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன் ரூ. 1.60 லட்சம் கோடியாகும். கா்நாடக அரசின் மோசமான ஆட்சி காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகி, கடனில் சிக்கியுள்ளனா். 3-4 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒழுங்கிற்கு பெயா் பெற்றிருந்த கா்நாடகம் தற்போது பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com