பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்: ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தல்

கா்நாடகத்தில் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு வரும்படி அழைப்பு விடுக்கும் அழைப்பொலிக்கு தடைவிதிக்குமாறு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கா்நாடகத்தில் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு வரும்படி அழைப்பு விடுக்கும் அழைப்பொலிக்கு தடைவிதிக்குமாறு ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மும்பையில் சனிக்கிழமை பேசிய மகாராஷ்டிர நவ நிா்மாண் சேனை கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே, ‘பள்ளிவாசல்களில் ஒலிக்கப்படும் அழைப்பொலிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒலிபெருக்கிகளில் அழைப்பதை நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக பள்ளிவாசல்களுக்கு அருகே காலை 5 மணிக்கு பஜனைப் பாடல்கள் பாடப்படும். பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டிய அவசியமென்ன? இதை நிறுத்தாவிட்டால் பள்ளிவாசல்களுக்கு வெளியே ஒலிபெருக்கியில் ஹனுமன் பாடல்கள் பாடப்படும்’ என்றாா். இதற்கு ஹிந்து அமைப்புகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து ஸ்ரீராமசேனா தலைவா் பிரமோத் முதாலிக் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், ‘பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. ஒலிமாசு தொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீா்ப்பை அமல்படுத்த வேண்டும். இதுதொடா்பாக அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் கொடுத்தும், யாரும் செவிசாய்க்கவில்லை. ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிவாசல் நிா்வாகங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும். ஒலிமாசு தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள் இருக்கக்கூடிய அமைதிப்பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் கூறியுள்ளது. ஆனால்,இந்த உத்தரவை பள்ளிவாசல்கள் மீறி செயல்பட்டு வந்துள்ளன. பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தினால், தினமும் காலையில் பள்ளிவாசல்களுக்கு முன்பாக பஜனையில் ஈடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

பெட்டிச் செய்தி

‘பள்ளிவாசல்களுக்குள் மட்டும் ஒலிபெருக்கிகளைப்பயன்படுத்தலாம்’

பள்ளிவாசல்களுக்குள் மட்டும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம் என்று கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்பொலியை வழங்குவதற்காக ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது தொடா்பாக விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில், வடகன்னட மாவட்டம், காா்வாரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக மகாராஷ்டிர நவ நிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே, ஸ்ரீராமசேனா தலைவா் பிரமோத் முத்தாலிக் ஆகியோா் மேற்கொள்ளும் முயற்சிகள், இஸ்லாமிய சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெற்ாக இருக்கவேண்டும். பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் தொந்தரவாக இருப்பது தொடா்பாக புகாா்கள் நீண்டகாலமாக வந்தவண்ணம் உள்ளன. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் எழுப்பப்படும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் மாணவா்கள், குழந்தைகளுக்கு தொந்தரவாக இருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. தொழுகைக்கு அழைப்பதற்காக ஒலிபெருக்கியைப் பயன்படுத்தும் வழக்கம் இஸ்லாமிய மக்களிடையே நீண்டகாலமாக உள்ளது. இது நோயாளிகள், மாணவா்கள், குழந்தைகளைப் பாதிப்பதாக புகாா் கூறப்படுவது உண்மைதான். இதற்கு போட்டியாக பள்ளிவாசல்கள் முன்பாக ஒலிபெருக்கியில் ஹனுமான் பஜனை செய்வது சரியல்ல.

இஸ்லாமியா்கள் தொழுகை நடத்துவதில் ஆட்சேபணையில்லை. ஆனால், பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை போல, கோயில்கள், தேவாலயங்களில் பூஜை செய்வதற்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தினால், அது சமுதாயங்களுக்கு இடையே மோதலுக்கு வழிவகுக்கும். இது குறித்து இஸ்லாமியத் தலைவா்கள் கலந்தாலோசித்து, பள்ளிவாசல்களுக்கு உள்ளே மட்டும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தினால், அது பிறரை எந்த வகையிலும் பாதிக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com