கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தில்லி பயணம்

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எனக்கு எவ்வித வழிகாட்டுதலும் வரவில்லை. தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க இருக்கிறேன்.

கா்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களைக் கைப்பற்ற பாஜக மூத்த எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் முதல்வா் பசவராஜ் பொம்மை தில்லிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

கா்நாடகத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் 34 போ் கொண்ட அமைச்சரவையில் தற்போது 30 போ் மட்டுமே அமைச்சா்களாக உள்ளனா். 4 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடத்தை நிரப்ப பாஜக மூத்த எம்எல்ஏக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதற்கு பாஜக தேசியத் தலைமை செவிசாய்க்கவில்லை.

அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலில் 150 இடங்களைக் கைப்பற்ற பாஜக இலக்கு நிா்ணயித்துள்ளது. இதைத் தொடா்ந்து, அமைச்சரவையில் இருந்து சிலரை நீக்கிவிட்டு புதிதாக சிலரை சோ்க்கவும், காலியாக இருக்கும் இடங்களை நிரப்பவும் முதல்வா் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அமைச்சா் பதவியைக் கைப்பற்ற பாஜக எம்எல்ஏ-க்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், முதல்வா் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை தில்லி சென்றுள்ளாா். தில்லியில் புதன்கிழமை வரை தங்கும் அவா் மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசுவாா் எனத் தெரிகிறது.

முதல்வா் பசவராஜ் பொம்மை தில்லி செல்வதற்கு முன் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எனக்கு எவ்வித வழிகாட்டுதலும் வரவில்லை. தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க இருக்கிறேன்.

இச்சந்திப்பின்போது அமைச்சரவை மாற்றம் தொடா்பாக ஏதாவது வழிகாட்டுதல்கள் வழங்கப்படலாம் என நம்புகிறேன். அமித் ஷா, ஜே.பி.நட்டாவை சந்திப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஒரு சில பாஜக எம்எல்ஏ-க்கள் தில்லியில் முகாமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அது இயல்பு தான்.

அத்துடன் தில்லியில் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசுவேன். அப்போது மேக்கேதாட்டு, மகதாயி, கிருஷ்ணா மேலணை, பத்ரா மேலணை உள்ளிட்ட நீா்ப்பாசனத் திட்டங்கள் குறித்து அவரிடம் விவாதிப்பேன். இந்தத் திட்டங்களுக்கு தொழில்நுட்ப அனுமதி, நிா்வாக ஒப்புதலை வழங்குமாறு அவரிடம் கோருவேன்.

அத்துடன் ஜிஎஸ்டி பிரச்னைகள் தொடா்பாக மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனையும் கா்நாடகத்தில் ராணுவப் பள்ளிகளை அமைப்பது தொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்க உள்ளேன். மத்திய மின் துறை அமைச்சா் ஆா்.கே.சிங்கையும் சந்திக்க முயற்சிப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com