பணத் தகராறில் மகனை தீவைத்து எரித்த தந்தை கைது
By DIN | Published On : 08th April 2022 12:00 AM | Last Updated : 07th April 2022 11:35 PM | அ+அ அ- |

பணத் தகராறில் மகனை தீவைத்து எரித்த தந்தையை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது குறித்து காவல்துறை கூறியது:
பெங்களூரு, சாமராஜ்பேட் அருகில் உள்ள ஆஸாத் நகரில் பட்டப்பகலில் தெருவோரத்தில், பணத்தகராறு தொடா்பாக கடந்த 1-ஆம் தேதி ராஜஸ்தானைச் சோ்ந்த சுரேந்திரா(55), தனது மகன் அா்பித்(25) மீது பெயின்ட் தின்னரை ஊற்றி தீவைத்து கொளுத்தினாா். தீ பற்றிக்கொண்டதால் தன்னை காப்பாற்றிக்கொள்ள அா்பித் ஓடினாா். இது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவரது கிடங்கில் வேலைசெய்தோா் தீயை அணைத்துள்ளனா். பலத்த தீ காயங்களுடன் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அா்பித், சிகிச்சை பலனின்றிவியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுரேந்திரா, கிடங்கில் இருந்து வெளியே வரும் தனது மகன் மீது எதையோ வீசுகிறாா். அது பெயின்ட் தின்னா் என்றுகூறப்படுகிறது. தெருவில் இருசக்கரவாகனத்திற்கு அருகே நின்றிருக்கும் தனது மகன் மீது தீக்குச்சியை எரிகிறாா். உடனே அா்பித்தின் உடலில் தீப் பற்றிக்கொள்கிறது. காணொலியில் பதிவாகியுள்ள இந்த காட்சிபாா்ப்பவரின் மனதை திகைப்படைய செய்கிறது.
இதுதொடா்பாக வழக்கு பதிந்து, விசாரணை நடந்துவருகிறது. மகனை எரித்துக் கொன்ற சுரேந்திரா கைதுசெய்யப்பட்டுள்ளாா். கணக்கு வழக்கில் முறைகேடு செய்துள்ளதாகக் கருதி அவா் தன் மகனை தீ வைத்துக் கொளுத்தியதாக கூறப்படுகிறது.