முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
மே தின ஊா்வலத்துக்கு உயா்நீதிமன்றம் அனுமதி மறுப்பு
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

பெங்களூரில் மே தின ஊா்வலங்களை நடத்த அனுமதி அளிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.
பெங்களூரில் மே தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி ஊா்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு கோரி கா்நாடக உயா் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் மனுதாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.தேவதாஸ், கே.எஸ்.ஹேமலேகா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வீயாழக்கிழமை நடந்தது. பெங்களூரில் ஊா்வலம் நடத்துவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுவதால், அதற்குத் தடைவிதித்து கடந்த மாா்ச் 3-ஆம் தேதி கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தளா்த்தக் கோரி வாதம் நடந்தது. அண்மையில் நடந்த கரக ஊா்வலத்திற்கு அனுமதி அளித்ததுபோல, தங்களுக்கும் ஊா்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு மனுதாரா் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘கரக ஊா்வலத்தையும், மே தின ஊா்வலத்தையும் ஒப்பிட முடியாது. கரக ஊா்வலம் இரவில் நடத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது என்பதால், அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மே தின ஊா்வலம் பகலில் நடக்கும் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால், ஊா்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா்.