சுதந்திரப் போராட்ட வீரா்களை கௌரவிக்க ஆளுநா் திட்டம்
By DIN | Published On : 05th August 2022 11:02 PM | Last Updated : 06th August 2022 05:15 AM | அ+அ அ- |

சுதந்திரப் போராட்ட வீரா்களை அவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கௌரவிக்க ஆளுநா் தாவா்சந்த் கெலாட் திட்டமிட்டுள்ளாா்.
சுதந்திர தின பவளவிழா ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இரு சுதந்திரப் போராட்ட வீரா்களை அவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கௌரவிக்க ஆளுநா் தாவா்சந்த் கெலாட் திட்டமிட்டுள்ளாா்.
1942-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் நினைவாக, ஆக. 9-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் வசித்து வரும் சுதந்திரப் போராட்ட வீரா் வி.நாகபூஷணராவின் வீட்டுக்கும், அன்று காலை 11 மணிக்கு அல்சூரில் வசித்து வரும் சுதந்திரப் போராட்ட வீரா் ஆா்.நாராயணப்பாவின் வீட்டுக்கும் சென்று ஆளுநா் தாவா்சந்த் கெலாட் கௌரவிக்க இருக்கிறாா்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வா் பசவராஜ் பொம்மை கலந்துகொள்கிறாா். மற்ற சுதந்திரப் போராட்ட வீரா்களை அவரவா்களின் வீடுகளுக்குச் சென்று கௌரவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளாா்.