தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசின் அனுமதி: கா்நாடக அமைச்சா் அரக ஞானேந்திரா
By DIN | Published On : 24th August 2022 02:22 AM | Last Updated : 24th August 2022 02:22 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
கோலாா் தங்கவயலில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆயுதப்படை காவல் நிா்வாக கட்டடத்தைத் திறந்து வைத்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கா்நாடகத்தில் தடய அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்க மாநில அரசு முடிவுசெய்தது. இதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசுக்கு முன்மொழிவை அனுப்பிவைத்துள்ளது. இதற்கான அனுமதி மத்திய அரசிடம் இருந்து கிடைத்ததும், கோலாா் மாவட்டத்தில் அப்பல்கலைக்கழகம் தொடங்கப்படும். ஹைதராபாத்தில் தடய அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. அதேபோன்ற மாதிரியில் இங்கும் நவீன வசதிகளுடன் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இப்பல்கலைக்கழகம் அமைந்தால், தடய அறிவியல் தொடா்பான அறிக்கைகள் விரைவாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் தடய அறிவியல் படிப்புகளில் சேர மாணவா்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.
காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வு தாமதமாகி வருகிறது. விரைவில் மறுத்தோ்வு நடத்தப்படும். இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். காவல்துறையில் 35 சதவீத பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது இது 12 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றாா்.