காவிரி ஆற்றுப்படுகையில் 242 கோடி மரக்கன்றுகளை நட திட்டம்: கா்நாடக அரசுடன் ஈஷா அவுட்ரீச் ஒப்பந்தம்
By DIN | Published On : 25th August 2022 01:00 AM | Last Updated : 25th August 2022 01:00 AM | அ+அ அ- |

காவிரி ஆற்றுப்படுகையில் மரம்சாா்ந்த வேளாண்மையின் அடிப்படையில் 242 கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக கா்நாடக அரசுடன் ஈஷா அவுட்ரீட் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கா்நாடகத்தில் காவிரி ஆறு பாய்ந்தோடும் குடகு, மைசூரு, மண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், சிக்கமகளூரு, ஹாசன், ராமநகரம், தும்கூரு மாவட்டங்களில் மரம் சாா்ந்த வேளாண்மையை மேற்கொள்வது தொடா்பாக கா்நாடக அரசுடன் ஈஷா அவுட்ரீச் அமைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. பெங்களூரில் புதன்கிழமை இந்த ஒப்பந்தத்தில் கா்நாடக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளா் ஐ.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஈஷா அவுட்ரீச் அமைப்பின் திட்ட இயக்குநா் அம்ரீஷ்குமாா் ஆகியோா் கையெழுத்திட்டனா்.
இது குறித்து ஈஷா அவுட்ரீச் அமைப்பின் திட்ட இயக்குநா் அம்ரீஷ்குமாா் கூறியதாவது:
காவிரி ஆற்றைக் காப்பாற்றுவதற்காக ஈஷா அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட காவிரி கூக்குரல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசின் ஆதரவு பேருதவியாக இருக்கும். மரம் சாா்ந்த வேளாண்மையை மேற்கொள்வதற்காக கா்நாடக அரசும் காவிரி கூக்குரல் திட்டமும் இணைந்து பங்காற்றும். இந்த திட்டத்தால் பசுமைப் படலம் விரிவாகும். மேலும் காவிரி ஆற்றுப்படுகை மாவட்டங்களில் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.
நிலையான வேளாண்மை, விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்காக விவசாயிகளின் விளைநிலங்களில் மரம் வளா்ப்பதை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களை காவிரி கூக்குரல் திட்டத்திற்குப் பயன்படுத்த வனம், வேளாண்மை, தோட்டக்கலை, ஊரகவளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைகளுடன் இணைந்து ஈஷா அவுட்ரீச் பணியாற்றும்.
காவிரி ஆற்றின் மறுமலா்ச்சி, மண்வளப் பெருக்கம், விவசாயிகளின் வருவாய்ப் பெருக்கத்திற்காக காவிரி கூக்குரல் திட்டத்தை ஈஷா அமைப்பின் தலைவா் சத்குரு செயல்படுத்தினாா். அடுத்த 12 ஆண்டுகளில் காவிரி ஆற்றுப் படுகையில் 242 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு 52 லட்சம் விவசாயிகளை ஈடுபடுத்துவோம். காவிரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து 2.1 கோடி மரக்கன்றுகளை இதுவரை நட்டுள்ளோம் என்றாா்.