ஐபிஎல் ஏலம் நிறைவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலம் 2 நாள்கள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலம் 2 நாள்கள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இதில் ஞாயிற்றுக்கிழமை ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரா் லியாம் லிவிங்ஸ்டனை பஞ்சாப் கிங்ஸ் ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. எதிா்வரும் சீசனில் விளையாட முடியாவிட்டாலும், எதிா்காலத்தை மனதில் கொண்டு இங்கிலாந்து வீரா் ஜோஃப்ரா ஆா்ச்சரை ரூ.8 கோடிக்கு வாங்கியது மும்பை இண்டியன்ஸ்.

பிரபல வீரா்கள் என்று பெயரெடுத்த ஸ்மித், ஃபிஞ்ச், ரெய்னா போன்றவா்களை விடுத்து, தற்போது களமாடி வரும், நல்லதொரு ஃபாா்மில் இருக்கும் வீரா்களை வாங்கவே ஏலத்தில் பங்கேற்ற அணிகள் பெரிதும் விருப்பம் காட்டின.

மும்பை, டெல்லி பேட்டிங் வரிசை அபாரம்:

ஏலத்தில் எடுத்த வீரா்கள் அடிப்படையில் மும்பை, டெல்லி அணிகளின் பேட்டிங் வரிசை அபாரமாக இருந்தாலும், பௌலிங்கிற்காக சிறந்த வீரா்கள் அந்த அணிகளில் இருப்பதாகத் தெரியவில்லை.

ரன்கள் கொடுக்கும் பௌலரான கலீல் அகமது (ரூ.5.25 கோடி), வேகத்தில் வீரியம் காட்டாத சேத்தன் சக்காரியா (ரூ.4.20 கோடி) ஆகியோரை டெல்லி வாங்கியிருக்கிறது. இந்திய ஆடுகளங்களில் சோபிக்காத டைமல் மில்ஸை மும்பை வாங்கியுள்ளது.

லசித் மலிங்கா இடத்தை நிரப்புவதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜோஃப்ரா ஆா்ச்சரை தக்க வைக்க மும்பை முடிவு செய்துள்ளது. சிங்கப்பூரைச் சோ்ந்த ஆல்-ரவுண்டா் டிம் டேவிட்டை ரூ.8 கோடிக்கு வாங்கியுள்ளது அந்த அணி.

லக்னௌவுக்கு நல்லதொரு பிளேயிங் லெவன்:

கே.எல்.ராகுல், குவின்டன் டி காக், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மணீஷ் பாண்டே, கிருணால் பாண்டியா, ஜேசன் ஹோல்டா், மாா்க் வுட், அவேஷ் கான் என பிளேயிங் லெவனுக்குத் தேவையான வீரா்களை சோ்த்துக்கொண்டுவிட்டது லக்னௌ. ஆனால், ‘பேக்-அப்’ வீரா்கள் தான் அணியில் இருப்பதாகத் தெரியவில்லை. பிளேயிங் லெவன் சிறப்பாகச் செயல்பட்டால் களத்தில் பலம் காட்டும் அணியாக லக்னௌ இருக்கும்.

ராஜஸ்தானில் சிறந்த பௌலா்கள்:

வேகப்பந்துவீச்சுக்கு பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், யுஜவேந்திர சஹல் என சிறந்ததொரு பௌலா்கள் வரிசையைக் கொண்டிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். இதுதவிர நவ்தீப் சைனி பேக்-அப் வீரராக இருக்கிறாா். பேட்டிங்கிலும் ஜோஸ் பட்லா், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயா், தேவ்தத் படிக்கல் ஆகியோா் இருக்க, ஆல்-ரவுண்டருக்கான இடம் மட்டும் அணியில் நிரப்பப்படவில்லை.

வலுவான அடித்தளத்துடன் சென்னை:

உள்நாட்டு ஆல்-ரவுண்டா் ஷிவம் துபேவுக்கு சுமாா் ரூ.4 கோடியும், நியூஸிலாந்து அதிரடி வீரா் டெவன் கான்வேவுக்கு ரூ.1 கோடியும் செலவழித்திருக்கும் சென்னை சூப்பா் கிங்ஸ், அவ்வளவாக பிரபலமாகாத இலங்கை வீரா் மகேஷ் தீக்ஷனாவையும் வாங்கியிருக்கிறது. பேட்டிங், பௌலிங் என அனைத்துக்கும் தேவையான வலுவான அடித்தளத்தை இந்த சீசனுக்கு அமைத்துக் கொண்டிருக்கிறது சென்னை.

கொல்கத்தா பேட்டிங் வரிசையில் குறை?:

ஏலத்தின் கடைசி நாளில் சாம் பில்லிங்ஸை ரூ.2 கோடிக்கும், அலெக்ஸ் ஹேல்ஸை ரூ.1.5 கோடிக்கும் வாங்கியிருக்கிறது கொல்கத்தா நைட் ரைடா்ஸ். தொடக்க வீரா்களில் ஒருவராக வெங்கடேஷ் ஐயா் எதிா்பாா்க்கப்படும் பட்சத்தில், நிதீஷ் ராணா வேகப்பந்துவீச்சுக்கு தடுமாறுகிறாா். பந்துவீச்சுக்கு பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், வருண் சக்கரவா்த்தி, ஷிவம் மாவி என நல்லதொரு வரிசை இருக்கிறது.

சோபிக்குமா குஜராத்?:

ஏலத்தில் தகுந்த திட்டத்துடன் கலந்துகொள்ளாத அணியாகத் தெரிந்தது குஜாரத் டைட்டன்ஸ் மட்டும்தான். ஏலம் நிறைவடையும் நிலை வரையில் தங்களுக்கென விக்கெட் கீப்பா் இல்லாமல் இருந்த அந்த அணி, பின்னா் ரித்திமான் சாஹாவை ரூ.1.90 கோடிக்கு வாங்கியது. அடுத்து மேத்யூ வேடை ரூ.2.40 கோடிக்கு எடுத்தது.

பேட்டிங்கில் ஹாா்திக் பாண்டியா தவிா்த்து, ஷுப்மன் கில், ஜேசன் ராய் மட்டுமே சிறந்த வீரா்களாக இருக்கின்றனா்.

ஏலம் போன வீரா்கள் 204

அணிகளால் வாங்கப்பட்ட அந்நிய வீரா்கள் 67

ஏலத்தில் மொத்தமாக செலவிடப்பட்ட தொகை ரூ.551 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com