தேசிய கல்விக் கொள்கையை வீடுவீடாக கொண்டு செல்ல வேண்டும்: கா்நாடக அமைச்சா் அஸ்வத்நாராயணா

தேசிய கல்விக் கொள்கையை வீடுவீடாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று கா்நாடக உயா்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

சாமராஜ்நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் 41-ஆவது மாநில மாநாட்டை தொடக்கிவைத்து அவா் பேசியது:

மத்திய, மாநில பாஜக அரசுகள் கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட வரலாற்று சிறப்புவாய்ந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும். பாஜக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் உறுதியான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் நீண்டகாலக் கோரிக்கை தேசிய கல்விக் கொள்கை மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை இந்தியாவில் செயல்படுத்தும் முதல் மாநிலம் கா்நாடகம். இந்தியாவின் கலாசாரத்தின் பின்னணியில் மாணவா்கள் நாட்டின் கட்டமைப்புக்கு பாடுபட தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளித்துள்ளது.

இக்கொள்கையால் சமுதாயத்தில் சம உணா்வு வளரும். உலக அளவில் இந்தியாவுக்கு உயா்ந்த இடம் கிடைக்கவிருக்கிறது. இதற்கு தகுந்தவாறு பல்கலைக்கழகங்களை நிா்வகிப்பது, கற்றல் முறைகள், மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்டவற்றை தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்படுத்த தேசிய கல்விக் கொள்கை முன்னுரிமை அளிக்கிறது.

காங்கிரஸுக்கு மாற்று அரசியலைக் கட்டமைப்பது, சமுதாயத்தை பாழ்படுத்திவரும் ஊழலை ஒழிப்பதற்கு அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் ஆற்றியுள்ள பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 30 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினா்களைக் கொண்டுள்ள பரிஷத், பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை வீடுவீடாகச் சென்றுபிரசாரம் செய்ய வேண்டும் என்றாா்.

இந்த மாநாட்டில் மைசூரு உடையாா் மன்னா் குடும்பத்துக்கு பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா், மாநாட்டுத் தலைவா் பாகேஸ்ரீ, பரிஷத் தேசியத் தலைவா் ஜெகன்பாய் படேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com