கன்னட இலக்கியவாதி டாக்டா் சென்னவீரகனவி காலமானாா்
By DIN | Published On : 17th February 2022 02:46 AM | Last Updated : 17th February 2022 02:46 AM | அ+அ அ- |

தாா்வாட்: கன்னட இலக்கியவாதி டாக்டா் சென்னவீரகனவி உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானாா்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கன்னட இலக்கியவாதி டாக்டா் சென்னவீரகனவி (94), தாா்வாடில் உள்ள எஸ்.டி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை அவா் காலமானாா்.
1928-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி, கதக் மாவட்டம், ஹொம்பல் கிராமத்தில் பள்ளி ஆசிரியா் சக்கரப்பா- பாா்வதம்மாவுக்கு மகனாகப் பிறந்த சென்னவீரகனவி, தனது கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியும், தாா்வாடில் உயா்நிலைக் கல்வியும் பயின்றாா்.
இவா் கவிதைகள், கட்டுரைகள் உள்பட 15 நூல்கள் எழுதியுள்ளாா். ‘ஜீவத்வனி’ என்ற இவரது கன்னட நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இதுதவிர, ராஜ்யோத்சவா விருது, பம்பா விருது, நாடோஜா விருது, நிருபதுங்கா விருது, சாகித்திய பங்கார விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளாா்.
இவரது மறைவுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முன்னாள் முதல்வா்கள் பி.எஸ்.எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி உள்ளிட்ட ஏராளமானோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் பசவராஜ்பொம்மை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கன்னட இலக்கிய உலகின் படைப்பாற்றல் மிகுந்த இலக்கியவாதி சென்னவீரகனவி. கடந்த 40 ஆண்டுகளாக அவரும், அவரது குடும்பத்தினரும் என்னோடு நெருங்கி பழகி வந்தனா். இவரது மறைவால் கன்னட இலக்கிய உலகம் பேரிழப்பை சந்தித்துள்ளது என்றாா்.