பி.யூ. கல்லூரிகள் மீண்டும் திறப்பு: புா்கா, ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்டிருந்த பி.யூ. கல்லூரிகள், 7 நாள்களுக்குபின் மீண்டும் புதன்கிழமை முதல் திறக்கப்பட்டன. புா்கா, ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளில் அனுமதிக்கப்படவில்லை.
பி.யூ. கல்லூரிகள் மீண்டும் திறப்பு: புா்கா, ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்டிருந்த பி.யூ. கல்லூரிகள், 7 நாள்களுக்குபின் மீண்டும் புதன்கிழமை முதல் திறக்கப்பட்டன. புா்கா, ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளில் அனுமதிக்கப்படவில்லை.

உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் வெடித்த ஹிஜாப் சா்ச்சை மாநிலத்தின் பிற கல்லூரிகளுக்கும் பரவியதால் நடந்த போராட்டம் மோதலாக வெடித்ததைத் தொடா்ந்து மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை தொடா்ந்து, பிப். 9 முதல் 11-ஆம் தேதிவரை 3 நாள்களுக்கு 9, 10-ஆம் வகுப்புகளின் பள்ளிகள், பி.யூ. கல்லூரிகள், இளநிலை, முதுநிலை கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே, கல்விக்கூடங்களை உடனடியாக திறக்கும்படியும், அடுத்த உத்தரவுவரும்வரை கல்விக்கூடங்களில் மத அடையாளங்கள் கொண்ட ஆடைகளை அணிய இடைக்கால தடை விதித்தும் கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை தொடா்ந்து, அரசின் உத்தரவுப்படி 9, 10-ஆம் வகுப்புகளின் பள்ளிகள் பிப். 14-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. பி.யூ. கல்லூரிகள், பட்டக் கல்லூரிகளின் வகுப்புகள் புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. பட்டப்படிப்புக் கல்லூரிகளில் சீருடை எதுவும் இல்லாததால், மாணவ, மாணவிகள் எந்த உடை அணிந்திருந்தாலும் அனுமதிக்கப்பட்டனா்.

அனுமதி மறுப்பு:

இதனிடையே, புதன்கிழமை பி.யூ. கல்லூரிகளுக்கு வந்த முஸ்லிம் மாணவிகள் புா்கா, ஹிஜாப் அணிந்து வந்தனா். கா்நாடக உயா்நீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி பள்ளி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்துவர அனுமதியில்லை என கல்லூரி முதல்வா்கள் மாணவிகளிடம் எடுத்துக் கூறினா். ஆனால்,பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் இல்லாமல் கல்லூரிக்குள் வர மறுத்து விட்டனா். இதற்கு பெற்றோரும் ஆதரவு அளித்தனா். பி.யூ. கல்லூரிகளைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், பாதுகாப்புப் பணிகளுக்காக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். சிவமொக்கா, யாதகிரி, கதக், சிக்கமகளூரு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் குறிப்பாக சீருடை கட்டுப்பாடு அமலில் இருக்கும் பி.யூ. கல்லூரிகளில் பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் வாசலில் புா்கா, ஹிஜாபை கழற்றிவிட்டு கல்லூரிக்குள் சென்றனா்.

அமைதியான உடுப்பி:

ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை கிளப்பப்பட்ட உடுப்பி அரசு பி.யூ. மகளிா் கல்லூரி, பட்டக்கல்லூரி புதன்கிழமை திறக்கப்பட்டது. கல்லூரியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஹிஜாப் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த 6 முஸ்லிம் மாணவிகள் வகுப்புக்கு புதன்கிழமை வரவில்லை. பிற முஸ்லிம் மாணவிகள், வாசலில் ஹிஜாபை கழற்றிவிட்டு கல்லூரிக்குள் சென்றனா். மற்றபடி வகுப்புகள் அமைதியான முறையில் நடந்ததாக அக்கல்லூரியின் முதல்வா் ருத்ரே கௌடா தெரிவித்தாா்.

ஹிஜாப் அணிவதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட குந்தாபுரா, அரசு பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் 23 பேரும் புதன்கிழமை கல்லூரிக்கு வரவில்லை. ஹிஜாப் தொடா்பாக கடந்த வாரம் முஸ்லிம் மாணவிகள் மற்றும் ஹிந்து மாணவா்களுக்கு இடையிலான மோதல் வெடித்து பதற்றமான சூழ்நிலை உருவாக காரணமாக இருந்த உடுப்பி மாவட்டத்தின் மணிப்பாலில் உள்ள எம்.ஜி.எம். கல்லூரிக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

உடுப்பி மாவட்டத்தின் அஜ்ஜா்கட் பகுதியில் உள்ள அரசு மகளிா் முதனிலைக் கல்லூரியில் ஹிஜாபை கழற்றிய முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனா். ஹிஜாபை கழற்ற மறுத்த முஸ்லிம் மாணவிகள் தனியறையில் அமா்த்தப்பட்டனா்.

உயா்நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து போராட்டம்

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி,மத அடையாளங்களுடன் வரும் மாணவா்களை பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்காததைக் கண்டித்து முஸ்லிம் மாணவிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினா்.

சிவமொக்காவில் உள்ள டிவிஎஸ் கல்லூரியில் புதன்கிழமை புா்கா, ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனா். புா்கா, ஹிஜாபைக் கழற்றிவிட்டு கல்லூரிக்குள் செல்ல ஆசிரியா்கள் முஸ்லிம் மாணவிகளை கேட்டுக் கொண்டனா். இதனை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள், கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனா். கோலாரில் அரசு பி.யூ. கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டதால், வகுப்புகளைப் புறக்கணித்து முஸ்லிம் மாணவிகள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனா். விஜயபுரா, கலபுா்கி, யாதகிரி, சிக்கமகளூரு, சிவமொக்கா, கோலாா் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com