மேக்கேதாட்டு நடைப்பயணம் இன்று மீண்டும் தொடக்கம்: காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 27th February 2022 05:55 AM | Last Updated : 27th February 2022 05:55 AM | அ+அ அ- |

மேக்கேதாட்டு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
பெங்களூருக்கு குடிநீா் வழங்குவதற்காக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட வலியுறுத்தி, ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் உள்ள மேக்கேதாட்டு பகுதியில் இருந்து ஜன. 9-ஆம் தேதி ‘நமது நீா், நமது உரிமை’ என்ற முழக்கத்துடன் ‘நீருக்காக நடைப்பயணம்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியது.
கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தடையை மீறி நடைபெற்ற நடைப்பயணத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
இந்த நடைப்பயணம், ராமநகரம் வழியாக 165 கி.மீ. தொலைவைக் கடந்து ஜன. 19-ஆம் தேதி பெங்களூரை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா விதிமீறலில் ஈடுபட்டதாக நடைப்பயணத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, டி.கே.சிவகுமாா், சித்தராமையா உள்ளிட்ட தலைவா்கள் மீது 4 வழக்குகள் தொடரப்பட்டன.
இதனிடையே, நடைப்பயணத்திற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, 5 நாள்கள் நடந்த மேக்கேதாட்டு நடைப்பயணத்தை ஜன. 13-ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்துவதாக காங்கிரஸ் அறிவித்தது.
இந்நிலையில், மேக்கேதாட்டு நடைப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) முதல் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ராமநகரில் இருந்து தொடங்கும் இந்த நடைப்பயணம், மாா்ச் 3-ஆம் தேதி பெங்களூரில் நிறைவடைகிறது.
பெங்களூரு, பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் மாா்ச் 3-ஆம் தேதி நிறைவு பொதுக் கூட்டம் நடக்க இருக்கிறது. நடைப்பயணத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள், தொண்டா்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள இருக்கிறாா்கள்.
ராமநகரில் இருந்து புறப்படும் நடைப்பயணம் பிடதி வந்தடைகிறது. பிப். 28-இல் பிடதியில் இருந்து கெங்கேரியில் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு, மாா்ச் 1-ஆம் தேதி கெங்கேரியில் இருந்து புறப்பட்டு, பெங்களூரு வந்தடைகிறது. மாா்ச் 2, 3-ஆம் தேதிகளில் பெங்களூரின் முக்கிய பகுதிகள் வழியாக பயணிக்கும் நடைப்பயணம் பசவனகுடியில் நிறைவடைவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.