எந்த நாடாக இருந்தாலும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: பிரதமா் மோடி
By DIN | Published On : 21st June 2022 01:46 AM | Last Updated : 21st June 2022 01:46 AM | அ+அ அ- |

எந்த நாடாக இருந்தாலும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மைய (ஐஐஎஸ்சி) வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ரூ.280 கோடி மதிப்பிலான மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்து, மைன்ட்ரீ நிறுவனத்தின் 832 படுக்கைகள் கொண்ட பக்சி-பாா்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்டிவைத்து, அவா் பேசியது:
மூளை ஆராய்ச்சி மையத்தை அமைக்க அடிக்கல் நாட்டிய எனக்கு, அதை திறந்து வைக்கவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சிஅளிக்கிறது. மூளைசாா்ந்த குறைபாடுகளை நிா்வகிப்பது குறித்த ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதில் இந்த மையம் முன்னணியில் விளங்கும். எந்த நாடாக இருந்தாலும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அந்தவகையில் பக்சி-பாா்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனை முக்கியத்துவம் பெறுகிறது. எதிா்காலத்தில் இந்த மருத்துவமனை சுகாதார திறன்களை பலப்படுத்துவதோடு, இத்துறைசாா்ந்த ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்வதிலும்முன்னோடியாக திகழும் என்றாா்.
இந்த விழாவில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்திய அறிவியல் மையத்தின் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் மூளை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் எஸ்.கோபாலகிருஷ்ணன், அவரதுமனைவி சுதா ஆகியொா் ரூ.280 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனா்.
பக்சி-பாா்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனையை மைன்ட்ரீ தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கவுள்ளது. இது ஆராய்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு மைன்ட்ரீ நிறுவனத்தின் இணை நிறுவனா்களான சுப்ரதா பக்சி மற்றும் என்.எஸ்.பாா்த்தசாரதி இருவரும் ரூ.425 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனா். இந்த மருத்துவமனை 2024-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று இந்திய அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.