காங்கிரஸில் இருந்து விலகினாா் சி.எம்.இப்ராகிம்: மஜதவில் இணைய வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.எம்.இப்ராகிம் அக்கட்சியில் இருந்து விலகினாா். வெகுவிரைவில் மஜதவில் இணைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் சி.எம்.இப்ராகிம் அக்கட்சியில் இருந்து விலகினாா். வெகுவிரைவில் மஜதவில் இணைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சி.எம்.இப்ராகிம், ஜனதா கட்சி, ஜனதாதளம், மதச்சாா்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளில் இருந்தவா். ஜனதாதளம் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தபோது அன்றைய பிரதமா் எச்.டி.தேவ கௌடா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவா். முன்னாள் முதல்வா் சித்தராமையாவை மஜதவில் இருந்து நீக்கியபோது, அவருடன் சி.எம்.இப்ராகிம் அக்கட்சியில் இருந்து விலகினாா். சித்தராமையாவுடன் சி.எம்.இப்ராகிம் காங்கிரஸில் இணைந்து செயலாற்றி வந்தாா்.

சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவி தனக்கு கிடைக்கும் என்று அவா் எதிா்பாா்த்திருந்த நிலையில், அப்பதவி பி.கே.ஹரிபிரசாத்துக்கு அளிக்கப்பட்டதால் சி.எம்.இப்ராகிம் அதிருப்தி அடைந்தாா். அதைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப்போவதாக சி.எம்.இப்ராகிம் சனிக்கிழமை அறிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இது தொடா்பான கடிதத்தை காங்கிரஸ் தேசியத் தலைவா் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். இது தொடா்பாக சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

அக்கடிதத்தை மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டியிடம் அளித்து, அதை ஏற்கச் செய்யலாம். எனது ராஜிநாமா ஏற்கப்பட்டால், சட்ட மேலவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும். அதன்மூலம் சட்டமேலவையில் நிலுவையில் உள்ள மதமாற்ற தடைச்சட்டத்தை பாஜக எளிதில் நிறைவேற்றிவிடும். அதனால், எனது ராஜிநாமா கடிதத்தை சித்தராமையாவுக்கு அனுப்பியிருக்கிறேன். எனது கடிதம் குறித்து காங்கிரஸ் முடிவு செய்துகொள்ளட்டும்.

நான் இப்போது சுதந்திர மனிதன். அதனால் எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியும். காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுபான்மையினத் தலைவா்களை காங்கிரஸ் புறக்கணிக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துகிறது. தன்மானத்திற்காகவே பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். அடுத்த சில நாட்களில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி ஆகியோரைச் சந்தித்து அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன்.

பிற கட்சிகளில் சேருமாறு எனக்கு அழைப்பு வந்தாலும் எனது விருப்பம் மஜதவில் சேருவதுதான். முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவுக்கு என்னைத் தெரியும், அவரை எனக்குத் தெரியும்.

தெரிந்த கட்சியில் சோ்ந்தால், பாதை எளிமையாக இருக்கும். 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் மஜத தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 1995-ஆம் ஆண்டில் நடந்தது போல, 2023-ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com