மேக்கேதாட்டு அணை: மத்திய அமைச்சரிடம் அனைத்துக் கட்சி குழுவை அழைத்துச் செல்ல திட்டம்: முதல்வா் பசவராஜ் பொம்மை

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் செல்ல திட்டம்
மேக்கேதாட்டு அணை: மத்திய அமைச்சரிடம் அனைத்துக் கட்சி குழுவை அழைத்துச் செல்ல திட்டம்: முதல்வா் பசவராஜ் பொம்மை

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேக்கேதாட்டு அணை உள்பட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப்பகிா்வு தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நீா்வளத்துறை அமைச்சா் கோவிந்த் காா்ஜோள், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பி.கே.ஹரிபிரசாத், மஜத சட்டப்பேரவைக்குழு துணைத்தலைவா் பண்டேப்பா காஷெம்பூா், மஜத சட்ட மேலவைக்குழு தலைவா் ஸ்ரீகண்டேகௌடா, முன்னாள் நீா்வளத்துறை அமைச்சா்கள் டி.கே.சிவகுமாா், எச்.கே.பாட்டீல், எம்.பி.பாட்டீல், தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை, செய்தியாளா்களிடம் கூறியது:

மேக்கேதாட்டு அணை உள்பட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பகிா்வு தொடா்பாக நிலவும் சிக்கல்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேக்கேதாட்டு அணை தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மேக்கேதாட்டு அணைக்கு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலை பெற முடிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை ஆணையத்தின் முன்பு 5 முறை கொண்டு சென்றும், அது நிகழ்ச்சி நிரலில் சோ்க்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும். அடுத்த கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தை சோ்க்க கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.

மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் பெற முயற்சிக்கப்படும். இது தொடா்பாக விவாதிக்கவும், காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டவும் வலியுறுத்த மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்திக்க திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நீா்வளத்துறை அமைச்சா் கோவிந்த்காா் ஜோள் தில்லி செல்லவிருக்கிறாா்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் முடிவடைந்ததும், நானும் தில்லி சென்று மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை உள்பட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பகிா்வு தொடா்பான பிரச்னைகளை அவரது கவனத்திற்கு கொண்டு செல்வேன். தேவை ஏற்பட்டால், மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கா்நாடகத்தின் அனைத்துக் கட்சித் தலைவா்களின் குழுவை அழைத்துச் சென்று கோரிக்கையை முன்வைப்போம்.

மகதாயி நடுவா்மன்றத் தீா்ப்பு அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் (கலசா-பண்டூரி கால்வாய்) திட்டப் பணிகளுக்கு அனுமதி பெற ஆலோசிக்கப்பட்டது. இதற்கான முயற்சியைத் தொடா்வோம். கிருஷ்ணா மேலணை-3-ஆம் கட்டப் பணிக்கு தெலங்கானா எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான சட்டத் தடைகளை நீக்க முற்படுவோம்.

கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணையாறு நதிநீா் இணைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாநிலத்தின் நீா்ப் பங்கு என்ன என்பது தெரியாமல் இத்திட்டத்திற்கு சம்மதம் தரக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மாநிலத்திற்கான நீா்ப் பங்கு தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட முடிவை எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே சமபங்கு, சமத்துவத்தை எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com