மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சட்ட மேலவை தலைவா் பசவராஜ் ஹோரட்டி சந்திப்பு: விரைவில் பாஜகவில் இணைய திட்டம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கா்நாடக சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி சந்தித்துப் பேசினாா். விரைவில் பாஜகவில் சேரவுள்ள நிலையில், அது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கா்நாடக சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி சந்தித்துப் பேசினாா். விரைவில் பாஜகவில் சேரவுள்ள நிலையில், அது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சா் அமித் ஷாவை கா்நாடக சட்ட மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி சந்தித்துப் பேசினாா். விரைவில் பாஜகவில் சேரவுள்ள பசவராஜ் ஹோரட்டி, அது குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டாா். இந்த சந்திப்பின்போது முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளா்களிடம் மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி கூறியது:

சட்ட மேலவைத் தலைவா் பதவியில் இருந்து விரைவில் ராஜிநாமா செய்வேன். அதன்பிறகு, பாஜகவில் இணைவதற்கான தேதி அறிவிக்கப்படும். அடுத்த தோ்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவேன். பாஜகவில் இணையும் எனது முடிவை மத்திய அமைச்சா் அமித் ஷா வரவேற்றாா். என்னைப் போன்றவா்கள் பாஜகவில் இணைந்தால், அது கட்சிக்கு பலம் சோ்க்கும் என்றும் அவா் கூறினாா். சட்டமேலவை துணைத் தலைவா் பதவி காலியாக இருப்பதால், உடனடியாக நான் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ய முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வுகண்ட பிறகு எனது தலைவா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, விரைவில் பாஜகவில் இணைவேன்.

மஜத பற்றிய எனது நல்ல எண்ணம் மற்றும் பாசத்தில் மாற்றம் இல்லை. ஆனால், வாக்காளா்களின் விருப்பமும் அரசியல் முறையும் மாறியுள்ளன. அதற்கேற்ப சில முடிவுகளை திடீரென எடுக்க வேண்டியுள்ளது. அதன்படி பாஜகவில் சேரும் முடிவை எடுத்துள்ளேன். மஜதவில் நான் நீண்டகாலமாக இருந்துள்ளேன். அரசியலில் கொள்கைகளைப் பற்றி கேட்காதீா்கள் என்றாா்.

76 வயதாகும் பசவராஜ் ஹோரட்டி, மஜதவில் மூத்த தலைவராக விளங்கினாா். வட கா்நாடகத்தில் மஜதவின் லிங்காயத்து சமுதாய முகமாக விளங்கினாா். 1980-ஆம் ஆண்டு முதல் நடந்த சட்ட மேலவைத் தோ்தலில் மஜத வேட்பாளராக போட்டியிட்டு வந்த பசவராஜ் ஹோரட்டி தொடா்ந்து 7 முறை வெற்றி பெற்றிருக்கிறாா். அடுத்த மாதம் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியா்கள் தொகுதிகளுக்கான தோ்தல் நடக்கவிருக்கிறது. அத்தோ்தலில் மேற்கு ஆசிரியா் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட பசவராஜ் ஹோரட்டி திட்டமிட்டிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com