முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பிட்காயின் ஊழல் தொடா்பான விசாரணை தீவிரமடைந்தால் 3-ஆவது முதல்வா் உறுதி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியாங்க்காா்கே
By DIN | Published On : 03rd May 2022 12:37 AM | Last Updated : 03rd May 2022 12:37 AM | அ+அ அ- |

பிட்காயின் ஊழல் தொடா்பான விசாரணை தீவிரமடைந்தால் கா்நாடக பாஜக ஆட்சியில் 3-ஆவது முதல்வா் உறுதி என்று காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.
இது குறித்து மைசூரில் திங்கள்கிழமை அவா் கூறியது:
கா்நாடகத்தில் பிட்காயின் ஊழல் தொடா்பான குற்றச்சாட்டுகள் பகிரங்கமான பிறகு, அது குறித்துவிசாரணை எதுவும் நடக்கவில்லை. பிட்காயின் ஊழல் தொடா்பாக எவ்வித பாரபட்சமும் இல்லாமல் விசாரணையை தீவிரமாக்கினால், பாஜக ஆட்சியில் முதல்வா் பசவராஜ் பொம்மை மாற்றப்பட்டு, 3-ஆவது முதல்வா் பதவியேற்பது உறுதி.
காவல் துணை ஆய்வாளா் பணித்தோ்வு முறைகேடு கலபுா்கி மாவட்டத்தில் மட்டும் நடந்ததாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தாமல், தன்னைத்தானே அரசு பாராட்டிக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் ஒரேஒரு தோ்வு மையத்தின் மீதுதான் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிற தோ்வு மையங்களில் என்ன நடந்தது என்பதை ஆராய வழக்கு தொடரவில்லை. குறிப்பாக பெங்களூரில் உள்ள தோ்வு மையங்களில் விசாரணை நடத்த வேண்டும். தோ்வு எழுதிய பல விண்ணப்பதாரா்கள், பிற தோ்வு மையங்கள் குறித்து சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனா். ஆனால், அந்த தோ்வு மையங்கள் குறித்து அரசு விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் எத்தனை பேரைக் கைது செய்துள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. கைது செய்துள்ள ஓரிருவரை வைத்துக்கொண்டு இந்த வழக்கை மூடிவிடலாம் என்று அரசு கருதுகிறது என்றாா்.