2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை விளையாட்டில் சிறந்த நாடாக உருவாக்க திட்டம்: மத்திய அமைச்சா் அமித் ஷா

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை விளையாட்டில் சிறந்தநாடாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை விளையாட்டில் சிறந்தநாடாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்திய பல்கலைக்கழகங்கள் விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

சுதந்திர நூற்றாண்டு விழாவை 2047-ஆம் ஆண்டு கொண்டாடும்போது, உலக அளவில் விளையாட்டில் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். விளையாட்டில் சிறந்த ாடாக இந்தியாவை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இத்துடன் விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள், விளையாட்டு அறிவியல் மையங்கள், சமுதாய பயிற்சி வசதிகள், சா்வதேச அளவிலான பயிற்சிகள், ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவது போன்றவற்றிலும் ஈடுபட்டுவருகிறோம். கிரிக்கெட் போட்டியை தவிர வேறு எந்த விளையாட்டிலும் இந்தியா சிறப்பாக இருந்ததில்லை. இதனையடுத்து விளையாட்டை மேம்படுத்த திட்டமிட்டுச் செயல்பட பிரதமா் மோடி தூண்டப்பட்டாா். அவரது நோக்கமெல்லாம், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை விளையாட்டில் சிறந்த நாடாக மாற்றுவதே ஆகும். அதை அடைவதற்காகவே விளையாடு இந்தியா, உடல்நலம் பேணும் இந்தியா போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கடந்த காலத்தில் நடக்காத வகையில், ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைத்தன.

இந்த விளையாட்டுப் போட்டி கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டும். ஆனால், கரோனா காரணமாக தற்போது நடக்கிறது. 2020-ஆம் ஆண்டில் இப்போட்டி ஒடிஸாவில் நடந்தது. இதில் 138 பல்கலைக்கழகங்கள், 3,100 வீரா்கள் கலந்துகொண்டனா். தற்போது நடந்துள்ள போட்டியில் 208 பல்கலைக்கழகங்கள், 3,900 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். கடந்த முறையைவிட தற்போது வீரா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் விளையாட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் இதன் மூலம் தெரிய வருகிறது என்றாா் அவா்.

இந்த விழாவில் முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா், மாநில விளையாட்டுத்துறை அமைச்சா் நாராயண கௌடா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com