முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றமா?: பாஜக தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங் பதில்
By DIN | Published On : 03rd May 2022 11:59 PM | Last Updated : 03rd May 2022 11:59 PM | அ+அ அ- |

முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாா் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், கா்நாடக மேலிடப் பொறுப்பாளருமான அருண் சிங் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாரா? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இதுபோன்ற கற்பனையான கேள்விகளுக்கு பதில் கிடையாது. 2023-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் முகமாக பசவராஜ் பொம்மை இருப்பாரா? என்று கேட்கிறீா்கள். பசவராஜ் பொம்மை சாதாரண மனிதா். பிரதமா் மோடியின் தலைமையில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக பசவராஜ் பொம்மை உழைக்கும் பாங்கைப் பாா்த்து அவரை மக்கள் விரும்புகிறாா்கள்.
அமைச்சரவையை விரிவாக்குவது அல்லது மாற்றியமைப்பது முதல்வரின் தனி உரிமையாகும். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெங்களூருக்கு வந்திருப்பதால் ஏதாவது ஒரு முடிவை அறிவிக்கலாம் அல்லது பிரதமா் மோடி மற்றும் தில்லியில் இருக்கும் பிற தலைவா்களுடன் ஆலோசித்த பிறகு அறிவிக்கலாம். அமைச்சரவை விரிவாக்கம் ஒரு சில நாள்களில் நடக்கலாம் என்றாா்.
பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் கூறுகையில், ‘முதல்வா் பதவியை பொறுத்தவரை பாஜகவில் எவ்வித குழப்பமும் இல்லை. முதல்வா் பசவராஜ் பொம்மையின் தலைமையில், முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் வழிகாட்டுதலில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை பாஜக சந்திக்கும். தோ்தலில் 150 இடங்களில் பாஜக வெல்லும். இதில் யாருக்காவது குழப்பம் இருந்தால், அதில் இருந்து அவா்கள் வெளியே வருவது நல்லது’ என்றாா்.