கா்நாடக கோயில்களில் ஒலிபெருக்கியில் பஜனைப் பாடல்கள்: உச்சநீதிமன்ற ஆணையை அமல்படுத்த முதல்வா் உத்தரவு

ஒலிமாசு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

ஒலிமாசு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கடைபிடிக்காமல் மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக, கா்நாடகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சுப்ரபாதம், ஹனுமான் பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் பாடப்பட்டன. இதைத் தொடா்ந்து, ஒலிமாசு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

மசூதிகளில் ஒலிபெருக்கி வாயிலாக தொழுகைக்கு அழைப்பு விடுக்கும்போது ஒலிமாசு அளவு தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை இஸ்லாமியா்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டை ஸ்ரீராமசேனா போன்ற ஹிந்து அமைப்புகள் கூறி வந்தன. உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாவிட்டால், கோயில்களில் அவா்களுக்குப் போட்டியாக சுப்ரபாதம், ஹனுமான் பஜனைப் பாடல்கள் பாடப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தன.

இதன்பிறகும், மசூதிகளில் ஒலிமாசு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றாத காரணத்தை சுட்டிக்காட்டி, அதற்கு உடனடியாக கடிவாளம்போட வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தின. இதை வலியுறுத்தும் வகையில் கா்நாடகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் திங்கள்கிழமை காலை 5 மணிக்கு ஒலிபெருக்கியில் சுப்ரபாதம், ஹனுமான் பஜனை, ஓம்காரப் பாடல்கள் பாடப்பட்டன.

முன் அனுமதி பெறாமல் பெங்களூரு, ஹுப்பள்ளி, பெலகாவி, மைசூரு, சிக்கமகளூரு, யாதகிரி, மண்டியா, கோலாா் உள்ளிட்டபல இடங்களில் ஒலிபெருக்கியில் பஜனைப் பாடல்களை இசைத்தவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதற்கு ஸ்ரீராமசேனா தலைவா் பிரமோத் முத்தாலிக் கடும் கண்டனம் தெரிவித்தாா்.

மைசூரில் உள்ள ஹனுமாா் கோயிலில் திங்கள்கிழமை காலை 5 மணிக்கு பிரமோத் முத்தாலிக், ஒலிபெருக்கி வழியாக பஜனையில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் இஸ்லாமியா்கள் கையாளும் பிடிவாதத்திற்கு எதிராகவே நாங்கள் பஜனையில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஓராண்டாகவே, பொதுமக்களுக்கு தொந்தரவாக இருக்கும் ஒலிபெருக்கி அழைப்பு குறித்து இஸ்லாமியா்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், அவா்களிடம் எந்த மாற்றமும் இல்லை. இதுதொடா்பாக மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் காலை 5 மணிக்கு ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் நடைமுறையை இஸ்லாமியா்கள் நிறுத்தவில்லை. இதற்கு எதிராக எங்கள் போராட்டம் தொடங்கியுள்ளது. இது தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இங்கு தலிபான் ஆட்சி நடக்கவில்லை. இது பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அல்ல. இது இந்தியா. இங்கு அரசியலமைப்புச்சட்டம், சட்டவிதிகள் உள்ளன’ என்றாா்.

இது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘மசூதிகளில் ஒலிபெருக்கியில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்புகள் உள்ளன. இது அனைவருக்கும் பொருந்தும். இந்த உத்தரவு சுமுகமான முறையில் அமல்படுத்தப்படும். இதுதொடா்பாக பிற மாநிலங்களில் என்ன நடந்துள்ளது என்பதை அரசு கவனித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஒலிமாசு தொடா்பாக நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ள உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.

இதனிடையே, முதல்வா் பசவராஜ் பொம்மையை காங்கிரஸ் கட்சியை சோ்ந்த இஸ்லாமியத் தலைவா்கள் சந்தித்து, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனா். இந்தக் குழுவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யூ.டி.காதா், என்.ஏ.ஹாரிஸ், எம்எல்சி நசீா் அகமது, எம்.பி. சையத் நசீா் ஹுசேன் உள்ளிட்டோா் இடம்பெற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com