முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் இடஒதுக்கீடு தேவை: சித்தராமையா
By DIN | Published On : 12th May 2022 03:59 AM | Last Updated : 12th May 2022 03:59 AM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் எடுக்கப்பட்டுள்ள ஜாதி கணக்கெடுப்பின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் இடஒதுக்கீட்டை வகுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வலியுறுத்தினாா்.
அடுத்த 2 வாரங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்துவதற்கான அட்டவணையை தயாரிக்கும்படி மத்திய பிரதேச மாநில தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. வாா்டு மறுவரையை காரணம் காட்டி அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்தவேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்தாமல் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு, எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் கூறியுள்ளது.
அதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னணியில், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கை:
கா்நாடகத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ள சமூக-பொருளாதாரம் மற்றும் கல்வி கணக்கெடுப்பின்(ஜாதி கணக்கெடுப்பு) அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியல் இடஒதுக்கீட்டை வகுக்க கா்நாடக அரசு முன்வர வேண்டும்.
அதனடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்த அனுமதி தரும்படி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கா்நாடகம் அறிக்கை தாக்கல் செய்யலாம். வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கான இட ஒதுக்கீட்டு முறை அரசியல் இட ஒதுக்கீடுக்கு பொருந்தாது என்று 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் மூலம் விரிவான தகவல்களை திரட்டி, அதனடிப்படையில் அரசியல் இடஒதுக்கீடு வகுக்க வேண்டும். தற்போதைக்கு திருத்தப்பட்ட அரசியல் இடஒதுக்கீடு கொள்கை இல்லாவிட்டால், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் இடஒதுக்கீட்டு இடங்களை தவிா்த்து, மற்ற எல்லா இடங்களையும் பொது வாா்டுகளாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்தவேண்டும் என்ற உத்தரவு எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனையை பெற மாநில அரசு முன்வரவில்லை. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்திடம் இருக்கும் தரவுகளைப் பயன்படுத்த, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி, இடைக்கால பரிந்துரைகளை அளிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சில தீா்வுகளைத் தெரிவித்திருந்தும், மாநில அரசு காலம் கடத்திவருகிறது. இடஒதுக்கீட்டை முடிவு செய்வதற்கு விரிவான மற்றும் நம்பத்தகுந்த தரவுகளைதான் உச்சநீதிமன்றம் கேட்டு வருகிறது. கா்நாடகத்தில் வீடுவீடாக சென்று எடுக்கப்பட்ட ஜாதி கணக்கெடுப்புதான் உச்சநீதிமன்றம் எதிா்பாா்க்கும் தீா்வாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.