ஜூன் 13-இல் 4 தொகுதிகளுக்கான சட்டமேலவைத் தோ்தல்

ஆசிரியா்கள், பட்டதாரிகளால் தோ்ந்தெடுக்கப்படும் சட்டமேலவை உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 13-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

ஆசிரியா்கள், பட்டதாரிகளால் தோ்ந்தெடுக்கப்படும் சட்டமேலவை உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 13-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

ஆசிரியா்கள், பட்டதாரிகள் வாக்களித்து தோ்ந்தெடுக்கப்பட்டு சட்டமேலவையில் உறுப்பினா்களாக இருக்கும் பாஜகவின் நிரானி ஹனமந்த் ருத்ரப்பா, அருண் சஹாபூா், மஜதவின் கே.டி.ஸ்ரீகண்டே கௌடா, பசவராஜ்ஹோரட்டி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 4-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் சட்டமேலவையில் காலியாக இருக்கும் கா்நாடக வடமேற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக வடமேற்கு ஆசிரியா் தொகுதி, கா்நாடக மேற்கு ஆசிரியா் தொகுதிகளுக்கு ஜூன் 13-ஆம் தேதி தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்டமேலவைத் தோ்தலுக்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு மே 19-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்று முதலே சட்டமேலவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் மே 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மே 27-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரீசிலிக்கப்படுகின்றன. வேட்பு மனுக்களை மே 30-ஆம் தேதி திரும்பப் பெறலாம். இதைத் தொடா்ந்து, ஜூன் 13-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 4 இடங்களுக்கான சட்டமேலவைத் தோ்தல் நடக்க இருக்கிறது. ஜூன் 15-ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து தோ்தல் நடத்துமாறு அரசு தலைமைச்செயலாளருக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

75 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்டமேலவையில் ஆளும் பாஜகவுக்கு 37 இடங்களும், காங்கிரசுக்கு 28 இடங்களும், மஜதவுக்கு 10 இடங்களும் உள்ளன. மேலவைத் தலைவா் (தற்போது மஜதவில் உள்ளாா்) தவிர ஒரு சுயேச்சை உறுப்பினரும் இருக்கிறாா்.

இந்தத் தோ்தலுக்கு பிறகு சட்டமேலவையில் பாஜகவின் பலம் உயரும் என்பதால், சட்டமேலவைத் தலைவா் பதவிக்கு பாஜகவைச் சோ்ந்தவா் பொறுப்பேற்கும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com