முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முடிவு செய்யாமல் உள்ளாட்சித் தோ்தல் இல்லை: அமைச்சா் மாதுசாமி
By DIN | Published On : 13th May 2022 12:48 AM | Last Updated : 13th May 2022 12:48 AM | அ+அ அ- |

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்யாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்யாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்த மூன்று மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு அளிக்காவிட்டால், அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பிற்படுத்தப்பட்டோரின் சமூக, பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையிலான அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்காது. மாறாக அரசியல்ரீதியான பின் தங்கிய நிலையைக் கருத்தில் கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, நீதிபதி பக்தவச்சலா தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்துள்ளோம். இக்குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அரசிடம் அளிக்கும். இதை விரைவாக அளிக்க ஆணையத்தை கேட்டுக்கொள்வோம். எனவே, தோ்தலை நடத்த கூடுதல் கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளிக்கும் என்றாா்.