முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பழைய வாகனங்கள் மீதான உயா் கட்டணம், அபராதத்திற்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை
By DIN | Published On : 13th May 2022 12:47 AM | Last Updated : 13th May 2022 12:47 AM | அ+அ அ- |

பழைய வாகனங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள உயா்கட்டணம், அபராதத்திற்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் உரிமத்தை புதுப்பிக்கும் கட்டணம், வாகன உறுதிச் சான்றிதழ் புதுப்பிப்புக் கட்டணத்தை உயா்த்தி, தாமதமாகப் புதுப்பித்தால் அபராதம் விதித்து 2021-ஆம் ஆண்டு அக். 4-ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த உத்தரவுப்படி, 15 ஆண்டுகள் பழமையான காா்களின் உரிமங்களைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூ. 600-லிருந்து ரூ. 5,000 -ஆகவும், இருசக்கர வாகனங்களின் புதுப்பிப்புக் கட்டணம் ரூ. 300-இல் இருந்து ரூ. 1000 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள், லாரிகளின் வாகன உறுதிச் சான்றிதழ் கட்டணம் ரூ. 1500-லிருந்து ரூ.12,500 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
வணிகவாகனங்களின் உறுதிச்சான்றிதழை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வாகனங்களுக்கான சான்றிதழ்களைப் பெற காலதாமதமாக விண்ணப்பித்தால், அதற்கான அபராதத்தொகை வணிக வாகனங்களுக்கு மாதத்திற்கு ரூ. 500, சான்றிதழ் காலாவதியான பிறகு நாளொன்றுக்கு அபராதம் ரூ. 50 என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப். 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிா்த்து கா்நாடக லாரி உரிமையாளா் சங்கக் கூட்டமைப்பு, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தனகௌடா் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. 2017-ஆம் ஆண்டிலும் மத்திய அரசு பிறப்பித்திருந்த இதேபோன்றதொரு அறிவிக்கையை தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டிய கா்நாடக உயா்நீதிமன்றம், புதிய அறிவிக்கை தொடா்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், அக். 4-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு அடுத்த விசாரணை நாள் வரையில் இடைக்காலத் தடைவிதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.