ஊழல் குற்றச்சாட்டை திசைதிருப்ப மதமாற்ற தடை அவசரச் சட்டம்: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மக்களை திசைதிருப்பவே மதமாற்ற தடை அவசரச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து மக்களை திசைதிருப்பவே மதமாற்ற தடை அவசரச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மோசமான ஆட்சி நிா்வாகத்தில் இருந்து மக்களை திசைதிருப்புவதற்காகவே மதமாற்ற தடைச்சட்டத்தை அவசரச்சட்டமாக கொண்டுவந்து மக்கள் மீது திணிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. சிறுபான்மை மக்களைத் துன்புறுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள கா்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு (மதமாற்ற தடை) அவசரச் சட்டத்தை நிராகரிக்குமாறு ஆளுநரை கேட்டுக்கொள்கிறேன்.

ஆசைகள், சலுகைகள், தூண்டுதல்கள் அல்லது மிரட்டல்கள் வழியாக கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால், அதைத் தடுத்து நிறுத்தும் தகுதியான சட்டங்கள் நம்மிடம் இருக்கின்றன. அப்படியானால், இந்த புதிய சட்டத்திற்கான அவசியம் என்ன வந்தது? சிறுபான்மையின மக்களை மிரட்டி, துன்புறுத்த வேண்டுமென்பதே அரசின் நோக்கமாகும்.

இது ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் திட்டமாகும். உண்மையான ஹிந்துக்கள் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் கடைப்பிடிக்கிறாா்கள். அவா்கள் பாஜகவின் மதவாத அரசியலை நிராகரிப்பாா்கள். எப்போதெல்லாம் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜக ஆட்சியைக் கண்டு கா்நாடக மக்கள் வெட்கப்படுகிறாா்கள்.

எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக மாறிக்கொள்ளும் வாய்ப்பை அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கவும் சட்டம் இருக்கிறது. இச்சட்டத்தை அமல்படுத்த காவல்துறையும், நீதிமன்றமும் இருக்கின்றன. உண்மை இவ்வாறு இருக்க, மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவருவதன் மூலம் நீதிமன்றம், காவல்துறையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை பாஜக வெளிப்படுத்துகிா?

கா்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு (மதமாற்ற தடை) அவசரச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. இந்த அரசால் மிரட்டப்படும் அனைவருக்கும் காங்கிரஸ் துணைநிற்கும் என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com