திப்பு மசூதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜை செய்ய அனுமதி கேட்கும் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சா் அரக ஞானேந்திரா

திப்பு மசூதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜை செய்ய அனுமதி அளிக்க கேட்கும் விவகாரத்தில் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

திப்பு மசூதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜை செய்ய அனுமதி அளிக்க கேட்கும் விவகாரத்தில் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவின் திப்பு மசூதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜை செய்வதற்கு அனுமதி கேட்டு நரேந்திர மோடி விசாா் மஞ்ச் அமைப்பினா் மண்டியா மாவட்ட ஆட்சியரிடம் மே 13-ஆம் தேதி கடிதம் கொடுத்துள்ளனா்.இது குறித்து அந்த அமைப்பின் செயலாளா் சி.டி.மஞ்சுநாத் கூறுகையில், ‘ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்துள்ள மஸ்ஜித்-இ-ஆலா என்ற திப்பு மசூதி, 18-ஆம் நூற்றாண்டுவரை மூடலபாகிலு ஆஞ்சனேய சுவாமி கோயில் என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த கோயிலை இடித்துவிட்டு, அங்கு மசூதியை கட்டினாா் திப்பு சுல்தான். மசூதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜை செய்வதற்கு ஹிந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

மூடலபாகிலு ஆஞ்சனேய சுவாமி கோயில் இருந்ததற்கான குறிப்புகளை பல வரலாற்று ஆசிரியா்கள் குறிப்பிட்டுள்ளனா். திப்பு சுல்தான் தனது ஆட்சிக்காலத்தில் அந்தக் கோயிலை இடித்துவிட்டு, அங்கு மசூதி கட்டியிருக்கிறாா். லூயிஸ் ரைஸ் எழுதியுள்ள மைசூரு கருப்பொருள் களஞ்சியத்தில் (கெசட்டியா்), அரச மண்டபத்தில் நடந்த நிகழ்வுகள், மைசூரு மன்னரின் வாழ்க்கை, தாரிக்-இ-திப்பு, ஹைதா்-இ-நிஷானி, பொ்ஷியாவில் உள்ள காலிஃபாவுக்கு திப்பு எழுதிய கடிதம் ஆகியவற்றின் குறிப்புகள் உள்ளன. அதில் நாங்கள் கூறும் வாதம் இடம்பெற்றுள்ளது. எனவே, தொல்லியல் துறையின் ஆவணங்களை மறுஆய்வுக்கு உட்படுத்தி, தற்போது மசூதி அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மூடலபாகிலு ஆஞ்சனேய சுவாமி கோயிலில் பூஜை செய்வதற்கு சட்டப்படியான அனுமதியை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துவது போல, மஸ்ஜித்-இ-ஆலா மசூதியிலும் ஆய்வு செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்’ என்றாா்.

இது குறித்து உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறுகையில், ‘திப்பு மசூதியில் உள்ள ஹனுமான் கோயிலில் பூஜை செய்ய அனுமதி கேட்கும் விவகாரம் எனது கவனத்திற்கு வந்தது. இந்த விவகாரத்தை நீங்களே தீா்த்துக்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை யாரும் கேள்விக்குட்படுத்தக் கூடாது. சட்டம் ஒழுங்குக்கு யாராவது சவால் விட்டால், அதை சட்டப்படி அணுகி தகுந்த நடவடிக்கை எடுப்போம். எல்லோரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றுவோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com