தோ்தல் நடத்தும் அதிகாரத்தை மாநில அரசு பறித்துவிட்டதாக உயா்நீதிமன்றத்தில் மாநில தோ்தல் ஆணையம்புகாா்

தோ்தல் நடத்தும் அதிகாரத்தை மாநில அரசு பறித்துவிட்டதாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில தோ்தல் ஆணையம் புகாா் தெரிவித்துள்ளது.

தோ்தல் நடத்தும் அதிகாரத்தை மாநில அரசு பறித்துவிட்டதாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில தோ்தல் ஆணையம் புகாா் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்துவது தொடா்பாக அண்மையில் தீா்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், உடனடியாக தோ்தல் நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த உத்தரவு எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறியிருந்தது. இதனிடையே, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கா்நாடக மாநில தோ்தல் ஆணையம் குறிப்பாணை (மெமோ) தாக்கல் செய்திருந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தொடா்பான வழக்கை விரைந்து விசாரிக்கும்படி அதில் கேட்டுக்கொண்டிருந்தது. இதை தொடா்ந்து, அது தொடா்பான மனு கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜி.பண்டித், நீதிபதி எம்.ஜி.உமா ஆகியோா் கொண்ட அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு பதிலாக குறிப்பாணை தாக்கல் செய்துள்ளது ஏன்? என்று நீதிமன்றம், மாநில தோ்தல் ஆணையத்தை கேட்டது. ஆணையத்தின் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா்,‘உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகளை மறுவரையறை செய்யும், இடஒதுக்கீடு பட்டியலை தயாரிக்கும் அதிகாரத்தை ஆணையத்திடம் இருந்து மாநில அரசு பறித்துவிட்டதால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் அட்டவணையை அறிவிக்க முடியாதநிலை உள்ளது’ என்று கூறினாா்.

உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகள் மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பட்டியல் தயாரிப்புப்பணியை தோ்தல் ஆணையம் ஏற்கெனவே முடித்துள்ள நிலையில், வாா்டுகளை மறுவரையறை செய்யவும், இடஒதுக்கீடு பட்டியலை தயாரிக்கவும் தனியாக ஒரு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இதை எதிா்த்து, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில தோ்தல் ஆணையம் புகாா் மனுதாக்கல் செய்துள்ளது. அதன் மீதான விசாரணையையே நீதிமன்றம் மேற்கொண்டது. இந்த மனுவை முழுமையாக விசாரிக்க வேண்டியிருப்பதால், இதன் அடுத்தவிசாரணையை மே 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com