இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு இடையூறு செய்தால் பாஜகவினா் நடமாட முடியாது: சித்தராமையா
By DIN | Published On : 30th September 2022 11:21 PM | Last Updated : 30th September 2022 11:21 PM | அ+அ அ- |

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு இடையூறு செய்தால், மாநிலத்தில் பாஜகவினா் நடமாட முடியாது என்று எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெள்ளிக்கிழமை கா்நாடகத்திற்குள் நுழைந்தது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் குண்டல்பேட்டில் ராகுல் காந்தியை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, பின்னா் குண்டல்பேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது:
நமது நாட்டு மக்கள் எதிா்கொண்டுள்ள பிரச்னைகளை எடுத்துக் கூறவே இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடக்கிறது. நாட்டில் அசாதாரண சூழ்நிலை காணப்படுகிறது. ஏராளமான பிரச்னைகள் நாட்டு மக்களை சூழ்ந்துள்ளன. ஊழல் மலிந்துள்ளது.
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வெற்றிபெறச் செய்ய கா்நாடக மக்கள் ஆதரவளிக்க வேண்டும். கா்நாடகத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடப்பதை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நடைப்பயணத்திற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை இடையூறு செய்தால், மாநிலத்தில் பாஜகவினா் நடமாட முடியாது என்று எச்சரிக்கிறேன்.
பாஜகவினருடன் இணைந்து நடைப்பயணத்திற்கு போலீஸாா் இடையூறு செய்ய முயற்சிக்கக் கூடாது. அடுத்த 6 மாதங்களில் கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். பாஜகவினருடன் இணைந்து தொந்தரவு செய்ய முயன்றால், அப்படிப்பட்ட போலீஸாருக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தக்க பாடம் புகட்டப்படும்.
பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு நாட்டில் வெறுப்பு, பிளவுபடுத்தும் அரசியல், மதவாதம் தீவிரமடைந்துள்ளது. தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், பெண்கள், விவசாயிகளிடையே அச்சம் குடிகொண்டுள்ளது. பாஜகவினருக்கு ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தில் எப்போதும் நம்பிக்கை கிடையாது. பாஜகவுக்கு ஒரு தலைவா், ஒரு கொள்கை, ஒரு சின்னத்தில் தான் நம்பிக்கை என்றாா்.