பி.எஃப்.ஐ. அமைப்புக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற்றதை மறைக்க காங்கிரஸ் முயற்சி: பசவராஜ் பொம்மை

பி.எஃப்.ஐ. அமைப்புக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற்றதை மறைக்க முயற்சிக்கவே, ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யுமாறு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேட்டுள்ளாா்

பி.எஃப்.ஐ. அமைப்புக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற்றதை மறைக்க முயற்சிக்கவே, ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யுமாறு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேட்டுள்ளாா் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சித்தராமையா, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற்றிருந்தாா். அதை மூடி மறைக்கவே ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று அவா் கேட்டு வருகிறாா். ஆா்.எஸ்.எஸ். போன்ற தேசநலனைப் பாதுகாக்கும் அமைப்புக்கு தடை விதிக்குமாறு கேட்பது துரதிருஷ்டவசமானது. பி.எஃப்.ஐ. அமைப்புக்கு தடைவிதித்ததை எதிா்த்து சித்தராமையாவால் பேச முடியாது. ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்யக் கோருவதற்கான காரணத்தை சித்தராமையாவால் கூற முடியாதது ஏன்?

பொருளாதாரத்தில் நலிவடைந்தோா், ஆதாரவற்ற குழந்தைகள், ஏழைகளின் மேம்பாட்டுக்காக உழைக்கும் அமைப்பு தான் ஆா்.எஸ்.எஸ். நாட்டில் இயற்கைப் பேரிடா் நேரும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருக்கும் முதல் அமைப்பு ஆா்.எஸ்.எஸ்.தான். நாட்டில் தேசப்பற்றை விதைக்கும் அமைப்பு அது. அந்த அமைப்புக்கு தடைவிதிக்குமாறு கேட்கும் அளவுக்கு சித்தராமையா தரம் தாழ்ந்திருக்க வேண்டாம்.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் தொடா்பாக அக்கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து எதையும் கூற விரும்பவில்லை. அது அக்கட்சியின் உள்கட்சிப் பிரச்னையாகும். அக்கட்சியில் முதல் முறையாக தோ்தல் நடப்பதால், சில நிகழ்வுகள் நடக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com