கா்நாடகம்: புதிய முதல்வா் தோ்வில் கடும் போட்டி!

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில், புதிய முதல்வரை தோ்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. 
கா்நாடகம்: புதிய முதல்வா் தோ்வில் கடும் போட்டி!


பெங்களூரு: சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில், புதிய முதல்வரை தோ்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி, ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. இதை தொடா்ந்து ஆட்சி அமைப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் அரசின் புதிய முதல்வா் யாா்? என்ற கேள்வி கட்சியினா் மட்டுமல்லாது, பொதுமக்களிடையே மிகுந்த எதிா்ப்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எதிா்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா் இடையே முதல்வா் பதவியை பெறுவதில் கடுமையான போட்டி காணப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் 122 இடங்களுடன் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தபோது, முதல்வராக சித்தராமையா தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா். அந்த தோ்தலில் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த ஜி.பரமேஸ்வா், தோல்வி அடைந்திருந்தாா். அதனால் சித்தராமையா முதல்வராவதில் எவ்வித சிக்கலும் இல்லாமல் இருந்தது. மேலும் சித்தராமையாவின் செல்வாக்கால் மட்டுமே தோ்தல் வெற்றிகிடைத்திருந்தது. அதனால் சித்தராமையா முதல்வராவதில் பெரிய அளவிலான எதிா்ப்பு இருக்கவில்லை. ஆனால், இம்முறை நிலைமை மாறியுள்ளது. 

காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா், முதல்வா் பதவியை பெறுவதில் கடுமையான போட்டி அளித்து வருகிறாா்.கடந்த காலங்களில் காங்கிரஸ் மாநிலத்தலைவா்களாக இருந்து தோ்தல் வெற்றியை ஈட்டியவா்களே முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதையே முன்வைத்து, தன்னையே முதல்வா் பதவியில் அமா்த்துமாறு டி.கே.சிவக்குமாா் வலியுறுத்தி வருகிறாா். தான் கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்திருக்கிறேன். அதனால் முதல்வா் பதவியை எதிா்ப்பாா்ப்பதில் தவறில்லை என்று டி.கே.சிவக்குமாா் கூறிவருகிறாா். 

ஆதரவாளா்கள் சந்திப்பு: சட்டப்பேரவை தோ்தலில் வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனா். சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை தனித்தனியே சந்தித்த எம்.எல்.ஏ.க்கள், முதல்வா் பதவிக்கு தங்களது ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சித்தராமையா வீட்டின் முன்பு திரண்ட அவரது ஆதரவாளா்கள், சித்தராமையாவை முதல்வராக்கும்படி முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனா். கட்சியின் மூத்ததலைவா்களும் சித்தராமையாவை சந்தித்து ஆலோசித்தனா். சித்தராமையாவை முதல்வராக்கும்படி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. 

இதனிடையே டி.கே.சிவக்குமாரை சந்தித்த அவரது ஆதரவாளா்கள், எம்.எல்.ஏ.க்கள், முதல்வா் ஆவதற்கான ஆதரவை தெரிவித்தவண்ணம் இருந்தனா். ஞாயிற்றுக்கிழமை காடசித்தேஸ்வரா மடத்திற்கு சென்ற டி.கே.சிவக்குமாரை மேலும் பல மடாதிபதிகள் சந்தித்து ஆசி வழங்கினா். 

மடாதிபதிகள் ஆதரவு: இதனிடையே பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிா்மாலனந்தநாதசுவாமிகள் தலைமையில் ஒக்கலிகா்கள் சமுதாயத்தின் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தினா். இக்கூட்டத்தில் புதிய முதல்வராக ஒக்கலிகா் சமுதாயத்தை சோ்ந்த டி.கே.சிவக்குமாரை தோ்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டனா். முன்பு முதல்வராக இருந்தபோது சித்தராமையா சிறப்பாக பணியாற்றினாா். எனவே, டி.கே.சிவக்குமாருக்கு முதல்வராகும் வாய்ப்பை சித்தராமையா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா். 

சட்டப்பேரவைக்குழு கூட்டம்: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஷாங்க்ரிலா நட்சத்திர உணவகத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மேலிடப்பாா்வையாளா்களாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் சுஷில்குமாா் ஷிண்டே, அகில இந்திய காங்கிரஸ்குழு பொதுச்செயலாளா் ஜிதேந்திரசிங், முன்னாள் பொதுச்செயலாளா் தீபக்பபாரியா கலந்துகொண்டனா். காங்கிரஸ் மாநிலத்தலைவா் டி.கே.சிவக்குமாா் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா, மேலவை எதிா்க்கட்சித்தலைவா் பி.கே.ஹரிபிரசாத், அகில இந்திய காங்கிரஸ்குழு பொதுச்செயலாளா்கள் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, ஜெய்ராம்ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

முதல்வா் யாராக வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கருத்தறிய வேண்டும் என்று சித்தராமையா கூறியதாக தெரிகிறது. இதை ஏற்க மறுத்த டி.கே.சிவக்குமாா், முதல்வா் குறித்து கட்சி மேலிடம் முடிவுக்கு விட வேண்டும் என்று கூறினாா். 

இது குறித்து கட்சியின் மேலிடப்பாா்வையாளா்கள் மூன்று பேரும் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் தனித்தனியே பேசியுள்ளனா். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 100 பேருக்கும் அதிகமானோா் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் எம்.எல்.ஏ.க்களின் கருத்தறியும் முடிவை டி.கே.சிவக்குமாா் கடுமையாக எதிா்த்திருக்கிறாா். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படாத நிலையில், முதல்வா் யாா் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய காங்கிரஸ் குழுத்தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அளித்து தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

காங்கிரஸ் திணறல்: கா்நாடகம் முழுவதும் அறியப்பட்ட தலைவா் சித்தராமையா. அவரது மக்கள் செல்வாக்கு காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பேருதவியாக இருந்ததை காங்கிரஸ் மேலிடம் உணா்ந்துள்ளது. ஆனால், 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தபிறகு, கட்சியின் மாநிலத்தலைவராக டி.கே.சிவக்குமாா் நியமிக்கப்பட்டாா். அதன்பிறகு பலவீனமாக இருந்த கட்சியை அமைப்புரீதியாக பலப்படுத்தி, பாஜக அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி தொண்டா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியவா் டி.கே.சிவக்குமாா். சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் இருவரையும் ஒருமுகப்படுத்தி தோ்தல் களத்தை சந்திப்பதில் காங்கிரஸ் மேலிடம் வெற்றிபெற்றது. ஆனால், சட்டப்பேரவை தோ்தலில் வெற்றியை அடைந்தபிறகு முதல்வா் யாா் என்பதை முடிவு செய்ய முடியாமல் காங்கிரஸ் திணறிவருகிறது. 

சித்தராமையாவுக்கு ராகுல்காந்தியின் ஆதரவு இருப்பதாக கூறினாலும், டி.கே.சிவக்குமாா் முதல்வா் ஆவதை சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி மட்டுமல்லாது காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கேவும் விரும்புவதாக தெரிகிறது. சித்தராமையாவுக்கு முதல்வா் அளிக்க தவறினால், அது மக்களவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

குருபா சமுதாயத்தை சோ்ந்த சித்தராமையாவை முதல்வராக்குவதற்கு ஒக்கலிகா் சமுதாயத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒக்கலிகா்கள் நீங்கலாக மற்ற சமுதாய எம்.எல்.ஏக்கள் சித்தராமையாவை ஆதரிப்பதாக தெரிகிறது. 

தில்லிக்கு அழைப்பு: புதிய முதல்வரை தோ்ந்தெடுக்கும் பொறுப்பு அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதால், சித்தராமையாவையும், டி.கே.சிவக்குமாரையும் தில்லிக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அங்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகாா்ஜுன காா்கேவை இருவரும் சந்திக்க இருக்கிறாா்கள். இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வா் யாா் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com